லீட்ஸ்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளராக புஜாரா மைக்கேல் வாகன் உள்ளிட்ட பிரபலங்கள் பணி புரிகின்றனர். இந்த சூழலில் இந்திய அணியை எப்போதுமே மைக்கேல் வாகன் வம்பு இழுத்து வருவதையே வழக்கமாக வைத்திருந்தார்.
இந்திய அணி குறித்து தவறான கணிப்பை எப்போதும் வெளியிடும் மைக்கேல் வாகன், இந்திய அணியை மட்டம் தட்டுவதையே தனது தொழிலாக வைத்திருந்தார். ஏதாவது ஒரு பெரிய தொடர் நடைபெற்றால் இந்திய அணி அந்தத் தொடரில் சாதிக்க முடியாது என்று கூறி வருவார்.

மேலும் இந்திய அணியில் உள்ள குறைகளை மட்டுமே அவர் பேசி வருவார். இந்திய அணி ஏதேனும் சாதித்தால் கூட அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். இப்படித்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதும், மைக்கேல் வாகன் இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடியதால் பட்டம் வென்றது எனக் கூறி விமர்சித்து இருந்தார்.
இந்த சூழலில் மைக்கேல் வாகன் மூக்கை உடைப்பது போல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா செய்த காரியம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 2020-21 ஆம் தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் 4 போட்டிகள் கொண்ட போட்டியில் விளையாடியது.
இந்த தொடர் குறித்து கணிப்பு வெளியிட்டிருந்த மைக்கேல் வாகன், இந்திய அணி இந்த தொடரில் நான்குக்கு பூஜ்ஜியம் என்று தோற்கும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் இந்திய அணி யாருமே எதிர்பாராத வகையில் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு விராட் கோலி இல்லாமலேயே இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த சூழலில் மைக்கேல் வாகனை தற்போது சந்தித்த புஜாரா, மைக்கேல் வாகன் போட்ட அந்த டிவீட்டை புகைப்படம் எடுத்து அதை பிரேம் செய்து மைக்கேல் வாகனிடமே சென்று அதில் கையெழுத்து வாங்கினார். அதாவது நீங்கள் 4-0 என்ற கணக்கில் நாங்கள் தோற்போம் என சொன்னீர்கள். ஆனால் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என சொல்லாமல் சொல்லி அதில் கையெழுத்து வாங்கி அதனை பிரேம் போட்டு மாட்டி இருக்கின்றார்.
தாம் மூக்கு உடைப்பட்டோம் என்பதை தெரிந்தும் மைக்கேல் வாகன் சிரித்துக்கொண்டே சமாளித்து அதில் கையெழுத்து போட்டு இருக்கிறார். இந்த சூழலில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தோற்கும் என மைக்கேல் வாகன் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.