சுப்மன் கில்லுக்கு ஆப்பு.. மீண்டும் ஃபார்முக்கு வந்த சீனியர் வீரர்.. இரட்டை சதம் விளாசி அசத்தல்!
ராஜ்கோட்: ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் அனுபவ வீரர் புஜாரா இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்களை விளாசியவர் புஜாரா. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் சீனியர் வீரரான புஜாராவை இந்திய அணி நிர்வாகம் நீக்கியது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி வெற்றிபெற்ற அனைத்து போட்டிகளிலும் புஜாராவே அதிக பங்கு வகித்துள்ளார். விராட் கோலியும் கடந்த சில ஆண்டுகளாக பெரிய ஃபார்மில் இல்லாத நிலையில், புஜாரா மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இவருக்கு பதிலாக இளம் வீரரான சுப்மன் கில் நம்பர் 3ல் களமிறங்கி வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடித்த சதத்திற்கு பின் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மண்ணில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் வெளிநாடுகளில் சொதப்புவது வாடிக்கையாக்கி வருகிறது.
இதனால் சமீப நாட்களில் சுப்மன் கில் மீது சுனில் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் காட்டமாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் செளராஷ்டிரா அணிக்காக புஜாரா களமிறங்கியுள்ளார். ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் நேற்றே சதம் விளாசி அசத்திய அவர், இன்று இரட்டை சதமாக மாற்றியுள்ளார். சிறப்பாக ஆடிய அவர் 356 பந்துகளில் 30 பவுண்டரிகள் உட்பட 243 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவரின் ஆட்டத்தால் செளராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 578 ரன்களை விளாசியுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முதல் 2 போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அந்த 2 போட்டிகளில் சுப்மன் கில் நிச்சயம் வாய்ப்பை பெறுவார். ஒருவேளை அந்த 2 போட்டிகளிலும் சுப்மன் கில் சொதப்பினால், நிச்சயம் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications