தரம்சாலா : இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுக இன்னிங்ஸிலேயே அரைசதம் விளாசிய சம்பவம் குறித்து இந்திய இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை இந்திய அணி சார்பாக 5 வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். ரஜத் பட்டிதர், சர்பராஸ் கான், துருவ் ஜுரெல், ஆகாஷ் தீப் மற்றும் தேவ்தத் படிக்கல் என்று 5 பேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ரஜத் பட்டிதர் மட்டும் இதுவரை முழுமையான திறமையை வெளிப்படுத்தவில்லை.

மீதமுள்ள 4 வீரர்களில் சர்பராஸ் கான் 3 அரைசதம் விளாசியுள்ளார். அதேபோல் 4வது போட்டியில் ஜுரெல் ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். தற்போது தேவ்தத் படிக்கல் அறிமுக இன்னிங்ஸிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இந்த நிலையில் இந்திய அணிக்காக அறிமுகமானது குறித்து தேவ்தத் படிக்கல் பேசுகையில், இந்திய அணிக்காக களமிறங்குவதற்காக தயாராக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக வைத்திருந்தேன்.
போட்டிக்கு ஒருநாள் முன்பே நான் களமிறக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்தது. இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது அரிதான ஒன்றாகும். அதனால் சவாலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று நினைத்தேன். நிச்சயம் களமிறங்கும் போது சிறிய பதற்றம் இருந்தது. ஆனால் அதனை பாசிட்டிவாக மாற்ற நினைத்தேன். களமிறங்கிய சில நிமிடங்கள் பேட்டிங் செய்வது சவாலாக இருந்தது. ஆனால் சர்பராஸ் கானுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பதே திட்டமாக இருந்தது.
டெஸ்ட் கேப் வாங்கிய நிமிடங்கள் ஸ்பெஷலானது. ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரின் பந்துகளில் நன்றாக ரிவர்ஸ் ஸ்விங்காகியது. அதனால் இருவரின் பவுலிங்கையும் எதிர்கொள்வது சவாலாக இருந்தது. ஆனால் ஓரளவிற்கு பிட்சில் விளையாடி இருந்ததால், அடுத்தடுத்து பவுண்டரிகள் அடிக்க முடிந்தது. கடந்த இரு ஆண்டுகள் எனது உடல்நிலை பிரச்சனை காரணமாக கடினமாக சூழலில் இருந்தேன். எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருப்பது நல்ல உணர்வை கொடுக்காது.
அதனால் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்த வேண்டும் என்ரு நினைத்திருந்தேன். இந்திய அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடும் போது கொஞ்சம் தெரிந்த மனிதர்கள் உடனிருந்தது உதவியாக இருந்தது. குறிப்பாக ராகுல் டிராவிட் இருந்ததால் ஓரளவிற்கு அழுத்தத்தை கட்டுப்படுத்த முடிந்தது. முதல் 15 நிமிடங்கள் அதிக பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் டிராவிட் சார், மகிழ்ச்சியாக இரு என்று அறிவுறுத்தினார். அதுதான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இன்றைய நாளின் இறுதிவரை பேட்டிங் செய்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என்று கூறினார்.