மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத பட்சத்தில் ரிஷப் பண்ட்டை ஒரு சிறப்பு பேட்ஸ்மேனாக மட்டும் களமிறக்க வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்தால், அது அவரது காயத்தை மேலும் மோசமாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்டின் முதல் நாளில் விக்கெட் கீப்பிங் செய்தபோது, ரிஷப் பண்ட்டின் இடது ஆள்காட்டி விரலின் நுனியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டி முழுவதும் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்தார். வலியுடன் பேட்டிங் செய்த பண்ட், முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்தார்.

இந்தச் சூழ்நிலையில், நான்காவது போட்டியில் பண்ட்டின் பங்கு குறித்து ஐசிசி பாட்காஸ்டில் பேசிய ரவி சாஸ்திரி, "பண்ட்டால் கீப்பிங் செய்ய முடியாவிட்டால், அவரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் சேர்க்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் ஃபீல்டிங் செய்ய வேண்டி இருக்கும்" என்று கூறினார்.
மேலும், "அவர் ஃபீல்டிங் செய்வது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். விக்கெட் கீப்பிங் செய்யும் போது கையுறைகளுடன் இருக்கும்போது ஓரளவாவது பாதுகாப்பு இருக்கும். கையுறைகள் இல்லாமல் ஃபீல்டிங் செய்யும்போது, பந்து விரலில் பட்டால் அது காயத்தை அதிகப்படுத்தும்" என்றார்.
ரிஷப் பண்ட்டின் காயத்தின் தன்மையை அணி நிர்வாகம் முழுமையாக ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினார் ரவி சாஸ்திரி. "அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால், அவர் ஓய்வெடுத்து ஓவல் டெஸ்டில் முழு உடற்தகுதியுடன் திரும்புவது நல்லது. அடுத்த டெஸ்டுக்கு அவரைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர் கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டையும் செய்ய வேண்டும். இரண்டில் ஒன்றை மட்டும் அவரால் செய்ய முடியாது," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஒருவேளை பண்ட் விளையாடத் தகுதி பெறவில்லை என்றால், அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் நேரடியாக அணியில் இடம் பெறுவார். இந்திய அணிக்காக இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜுரெல், 40.40 சராசரியில் 202 ரன்கள் எடுத்துள்ளார். ரிஷப் பண்ட் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி, ஆறு இன்னிங்ஸ்களில் 70.83 சராசரியுடன் 425 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட், பண்ட்டை எந்தச் சூழ்நிலையிலும் டெஸ்டில் இருந்து வெளியேற்ற முடியாது என்று நம்பிக்கை தெரிவித்தாலும், போட்டியின் நடுவில் கீப்பரை மாற்றும் நிலைமை ஏற்படுவதை மீண்டும் எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால், மான்செஸ்டரில் நடைபெறவிருக்கும் முக்கியமான நான்காவது டெஸ்டில் ரிஷப் பண்ட்டின் தேர்வு குறித்து இந்திய அணி நிர்வாகம் கவனமாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.