ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமே பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எடுத்த ஒரு மோசமான முடிவு தான் என விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அணித் தேர்வில் செய்த அந்த தவறான முடிவு இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா மற்றும் முகமது ஷமி ஆகிய மூவர் உத்தேச அணியில் இருந்த போதும் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளர் மட்டுமே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்று வந்தார்.

கொல்கத்தா மற்றும் சென்னை சேப்பாக்கம் மைதானங்கள் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் அங்கு ஒரு முழு வேகப் பந்துவீச்சாளரையும், 3 முதல் 4 சுழற் பந்துவீச்சாளர்களையும் ஆட வைத்தார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். அது இந்திய அணிக்கு சாதகமாகவும் அமைந்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆனால், மூன்றாவது போட்டி நடைபெற்ற ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். இங்கு சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது என்பது ஆபத்தான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், மிக எளிதாக சிக்ஸர்களை விளாசலாம்.
ஆனால், அதை கண்டுகொள்ளாமல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முந்தைய போட்டிகளை போலவே நான்கு சுழற் பந்துவீச்சாளர்களும், ஒரே ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளராக முகமது ஷமியும் மட்டுமே இடம் பெற்றனர். ஹர்திக் பாண்டியா பகுதி நேர வேகப்பந்துவீச்சாளராக செயல்பட்டார்.
முந்தைய இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 14 மாதங்கள் கழித்து முகமது ஷமி களமிறங்கினார். ஷமி நீண்ட இடைவெளிக்கு பின் வந்ததால் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
ராஜ்கோட் மைதானத்தில் எதிர்பார்த்தது போலவே இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் அதிக ரன்களை வாரி இறைத்தனர். வருண் சக்கரவர்த்தி மட்டுமே சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அக்சர் பட்டேல் 3 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவி பிஷ்னோய்க்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கை களமிறக்கி இருக்க இருந்தால் நிச்சயமாக இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்து இருக்கலாம்.
ஆனால், இங்கிலாந்து அணி விக்கெட்களை இழந்த போதும் அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இந்திய அணி செய்த தவறை செய்யாத இங்கிலாந்து அணி, ஒரே ஒரு விக்கெட் வீழ்த்தும் சுழற் பந்துவீச்சாளரை மட்டும் வைத்து நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.
172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களிடம் துவக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறினர். பின்னர் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
அதிக தாக்கத்தை ஏற்படுத்தும், விக்கெட்களை வீழ்த்தும் பந்து வீச்சாளர்களை அணியில் தேர்வு செய்து இருக்க வேண்டும். அதை செய்ய தவறியதால் தான் இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்தது. குறிப்பாக முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திய அர்ஷ்தீப் சிங்கை மூன்றாவது போட்டியில் ஆட வைத்து இருக்க வேண்டும். அதை செய்யாததே மிகப்பெரிய தவறான முடிவாக அமைந்தது.