IND vs ENG: எல்லை மீறிய ரிஷப் பண்ட்.. தண்டனை வழங்கிய ஐசிசி.. அம்பயர் முன்பே இப்படி செய்தது தவறு
லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பண்ட் செய்த ஒரு தவறான செயலுக்காக அவருக்கு சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ICC) தண்டனை வழங்கி உள்ளது. அவர் அம்பயரின் முடிவை ஏற்காமல் பந்தை தூக்கி எறிந்ததற்காக அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி பெட்ஃபோர்ட் லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 471 ரன்கள் எடுத்து இருந்தது.

அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது, 61வது ஓவரில் இந்திய அணி சார்பில் ரிஷப் பண்ட் பந்தை மாற்ற வேண்டும் என அம்பயரிடம் கோரிக்கை வைத்தார். பந்து அதன் அனுமதிக்கப்பட்ட அளவை விட மாறிவிட்டதாகவும், எனவே புதிய பந்தை அளிக்க வேண்டும் எனவும் ரிஷப் பண்ட் கோரிக்கை வைத்தார்.
அப்போது அம்பயர் பந்தை அளக்கும் கருவியின் மூலம் அதை அளந்து பார்த்தார். பந்து சரியாக இருப்பதாக பின்னர் அறிவித்தார். ஆனால், அதை ரிஷப் பண்ட் ஏற்க மறுத்தார். அம்பயரிடமிருந்து பந்தை வாங்கிய அவர், அதை அம்பயர் முன்பே தூக்கி எறிந்தார். இது அம்பயரை அவமரியாதை செய்யும் வகையில் இருந்தது. இதை அடுத்து அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மாதங்களில் அவர் செய்யும் முதல் குற்றம் என்பதால் ஒரு டிமெரிட் புள்ளி என்ற தண்டனையுடன் ரிஷப் பண்ட் தப்பி இருக்கிறார். ஒருவேளை அவர் இதே காலகட்டத்தில் அதிக முறை இது போன்ற விதிமுறைகளில் ஈடுபட்டிருந்தால், அவருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் இது போன்ற தவறுகள் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும், இல்லை எனில் அவருக்கு மேலும் அதிக டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும். நான்கு டிமெரிட் புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளுக்கு முன்பே ரிஷப் பண்ட்டுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆட உள்ளது. ஏற்கனவே அந்த அணி நான்காவது நாள் முடிவில் விக்கெட் இழப்பு இன்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ஐந்தாவது நாள் அன்று 350 ரன்களை எடுக்க வேண்டி உள்ளது. அதை இங்கிலாந்து எட்டுமா அல்லது இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் சாய்த்து வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications