லீட்ஸ்: இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா, அவர் பிளேயிங் லெவனில் அறிவிக்கப்பட்டு போட்டியில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர்களான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் வெளியிட்டுள்ள கணிப்புகளில் சாய் சுதர்சனுக்கு இடம் அளித்திருக்கின்றனர். அதாவது, சாய் சுதர்சனை நிச்சயம் இந்திய அணியில் ஆடவைக்க வேண்டும், அது இந்திய அணிக்குச் சாதகமாக இருக்கும் என அவர்கள் இருவருமே குறிப்பிட்டிருக்கின்றனர்.

தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் யார், யார் ஆட வேண்டும் என ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதேபோல ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் ஆட வேண்டும் என ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர்கள் இருவருமே சாய் சுதர்சனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அவருக்குத் தங்களின் கணிப்பில் இடம் அளித்திருக்கின்றனர்.
தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள பேட்டிங் வரிசையில் கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். சாய் சுதர்சனுக்கு மூன்றாம் வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நான்காம் வரிசையில் கேப்டன் சுப்மன் கில், ஐந்தாம் வரிசையில் துணை கேப்டன் ரிஷப் பண்ட், ஆறாம் வரிசையில் கருண் நாயர் இடம் பிடித்து இருக்கின்றனர்.
ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஏழாவது வரிசையிலும், ஷர்துல் தாக்கூர் எட்டாவது வரிசையிலும் விளையாட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். நிதீஷ் குமார் ரெட்டிக்கு தினேஷ் கார்த்திக் இடம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் பற்றிய கணிப்பில், கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக இறங்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார். அஷ்வினும் சாய் சுதர்சனுக்கு மூன்றாம் வரிசையில் இடம் அளித்திருக்கிறார். நான்காம் வரிசையில் சுப்மன் கில், ஐந்தாம் வரிசையில் கருண் நாயர், ஆறாம் வரிசையில் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு அஸ்வின் இடம் அளித்திருக்கிறார்.
தினேஷ் கார்த்திக் கூறியதில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே அஸ்வின் செய்திருக்கிறார். அதாவது, ஐந்தாவது இடத்தில் கருண் நாயரையும், ஆறாவது இடத்தில் ரிஷப் பண்ட்டையும் ஆட வைக்க வேண்டும் என அஸ்வின் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும், ஏழாவது வரிசையில் ரவீந்திர ஜடேஜா, எட்டாவது வரிசையில் ஷர்துல் தாக்கூர், ஒன்பதாம் வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா, பத்தாம் வரிசையில் முகமது சிராஜ், இறுதியாக பிரசித் கிருஷ்ணா ஆகியோரை அஸ்வின் தேர்வு செய்திருக்கிறார். அதாவது, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற விகிதத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அணியைத் தேர்வு செய்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் கூறியது போல, சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஏனெனில், அபிமன்யு ஈஸ்வரனுக்கு மூன்றாம் வரிசையில் இடம் அளிக்கப்படும் என ஒரு தகவல் வலம் வருகிறது. அபிமன்யு ஈஸ்வரன் அல்லது சாய் சுதர்சனில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.