மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கருண் நாயர் நீக்கப்பட்டு அவர் ஆடி வந்த மூன்றாம் வரிசையில் ஆடுவதற்கு சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் குழப்பமான முடிவுகள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத தூணாக ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்டது நம்பர் 3 பேட்டிங் வரிசை. ராகுல் டிராவிட் அந்த இடத்தில் நீண்ட காலன் ஆடினார். பின்னர் சேதேஷ்வர் புஜாரா அந்த இடத்தில் நிலையாக ஆடி வந்தார். ஆனால், புஜாரா ஓரங்கட்டப்பட்ட பிறகு, அந்த இடம் சரியான பேட்ஸ்மேன் இல்லாமல் திணறி வருகிறது.

இந்திய அணியின் கடைசி 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 5 பேட்ஸ்மேன்கள், 6 முறை அந்த இடத்தில் மாற்றப்பட்டுள்ளனர் என்பது, இந்திய அணி நிர்வாகத்தின் குழப்பத்தையும், ஸ்திரத்தன்மையற்ற முடிவுகளையும் அப்பட்டமாக காட்டுகிறது.
ஆம், பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 முதல் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடர் வரை, இந்திய அணியின் நம்பர் 3 இடம் ஒரு "மியூசிக் சேர்" போட்டியாகவே மாறியுள்ளது. புதிய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வருகைக்குப் பிறகு, இந்த மாற்றங்கள் மேலும் அதிகரித்து வருவது, கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மூன்றாம் வரிசை மாற்றங்கள்
கடந்த ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் நம்பர் 3 பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ:
1வது டெஸ்ட்: தேவ்தத் படிக்கல்
2வது டெஸ்ட்: சுப்மன் கில்
3வது டெஸ்ட்: சுப்மன் கில்
4வது டெஸ்ட்: கே.எல். ராகுல்
5வது டெஸ்ட்: சுப்மன் கில்
1வது டெஸ்ட்: சாய் சுதர்சன்
2வது டெஸ்ட்: கருண் நாயர்
3வது டெஸ்ட்: கருண் நாயர்
4வது டெஸ்ட்: சாய் சுதர்சன் (தற்போதைய மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி)
இந்த புள்ளிவிவரம் கூறுவது ஒன்றே ஒன்றுதான் - இந்திய அணி நிர்வாகம், குறிப்பாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர், நம்பர் 3 இடத்திற்கு ஒரு நிரந்தர வீரரைத் தேர்வு செய்வதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறார். ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு வீரர் என்பது, டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படைக்கே முரணானது. இது வீரர்களின் மனஉறுதியைக் குலைப்பதோடு, அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையின் நிலைத்தன்மையையும் பாதிக்கிறது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்து கோப்பையை வென்று கொடுத்த கௌதம் கம்பீர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றபோது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முடிவுகள் இதுவரை பலனளிக்கவில்லை என்பதே உண்மை. குறிப்பாக, இங்கிலாந்து தொடரில் இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு முதல் டெஸ்டில் வாய்ப்பு கொடுத்துவிட்டு, அடுத்த இரண்டு போட்டிகளில் அவரை நீக்கி, நீண்ட வருடங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய கருண் நாயரைக் களமிறக்கியது பல புருவங்களை உயர்த்தியது.
கருண் நாயர், கிடைத்த வாய்ப்புகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சோபிக்கவில்லை. லார்ட்ஸ் டெஸ்டில் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்தது அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. தற்போது, தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள நான்காவது டெஸ்டில், மீண்டும் சாய் சுதர்சனுக்கே அணி நிர்வாகம் திரும்பியுள்ளது. இந்த தொடர்ச்சியான மாற்றங்கள், "ஒரு வீரரின் திறமையை ஓரிரு போட்டிகளில் எடைபோட்டு விட முடியுமா?" என்ற கேள்வியை எழுப்புகிறது. கம்பீரின் இந்த திடீர் முடிவுகள், அணியில் ஒருவித பதற்றமான சூழலை உருவாக்குகிறது என கிரிக்கெட் வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர்.
ஒரு காலத்தில், தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், "புஜாரா இருக்கிறார்" என்ற நம்பிக்கை ஒட்டுமொத்த அணிக்கும் இருந்தது. எதிரணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு, அவர்களை சோர்வடையச் செய்வதில் புஜாரா கைதேர்ந்தவர். ஆஸ்திரேலிய மண்ணில் அவரது சதங்கள் இன்றும் பேசப்படுகின்றன.
ஆனால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அந்த இடத்தை நிரப்ப வந்த வீரர்கள் அனைவரும் தடுமாறி வருகின்றனர். கில், ராகுல் போன்ற சிறந்த வீரர்கள் கூட அந்த இடத்தில் நிலைக்க முடியவில்லை என்பது, அந்த இடத்தின் முக்கியத்துவத்தையும், புஜாரா விட்டுச்சென்ற வெற்றிடத்தின் அளவையும் காட்டுகிறது.
சுப்மன் கில், நம்பர் 3ல் இருந்து தற்போது 4ம் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விளையாட வேண்டிய இடம் நம்பர் 3. ஆனால், இந்திய அணி அந்த இடத்தில் தொடர்ந்து பரிசோதனைகளைச் செய்வது புரியாத புதிராக உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கியுள்ளது. தொடரை சமன் செய்ய, மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற பெரும் அழுத்தத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. இந்தச் சூழலில், பேட்டிங் வரிசையில் செய்யப்படும் மாற்றங்கள் எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கௌதம் கம்பீர், ஒரு கண்டிப்பான பயிற்சியாளராக அறியப்படுகிறார். ஆனால், அவரது திட்டங்கள் மற்றும் வீரர்கள் தேர்வு முறைகள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிக்கு வெற்றியைத் தேடித் தருமா என்பதே இப்போதைய கேள்வி. நம்பர் 3 என்ற புதிரை அவர் விரைவில் விடுவிக்கவில்லை என்றால், அது இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்திற்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.