“இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு இடம் கொடுக்கக் கூடாது.. இந்த வீரருக்கு முதல்ல கொடுங்க” - கைஃப்
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சாய் சுதர்சனுக்கு இடம் அளிக்கக் கூடாது, அவருக்கு முன்பாக அபிமன்யு ஈஸ்வரனுக்குத்தான் இந்திய அணியில் இடம் அளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் வலியுறுத்தி இருக்கிறார். அவரது விமர்சனம் அதிக அளவில் கவனம் பெற்று வருகிறது. சிலர் இது சரி என்றும், சிலர் தவறு என்றும் கூறி வருகின்றனர்.
இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதில் விளையாட உள்ளது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இல்லாத நிலையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் இடத்தில் இரண்டு புதிய வீரர்களை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் தான், கருண் நாயர் அணியில் இடம் பிடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய இருக்கிறார். மூன்றாம் வரிசையில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் இடையே போட்டி நிலவுகிறது. இது குறித்து இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என இந்திய அணி வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் வீரர் முகமது கைஃப் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சாய் சுதர்சனுக்கு முன்பாக அபிமன்யு ஈஸ்வரனுக்கு இடம் அளிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அபிமன்யு ஈஸ்வரன் 27 முதல் தரப் போட்டி சதங்கள் அடித்திருக்கிறார். முதல் தரப் போட்டிகளில் 8000 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். அதற்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார்.
"மேலும், சர்பராஸ் கானை ஏற்கனவே நீங்கள் நீக்கி இருக்கிறீர்கள். அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா 'ஏ' போட்டியில் அதிக ரன் குவித்து இருக்கிறார். அவரை நீக்கியதன் மூலம் தேர்வுக் குழுவினர் தவறை செய்திருக்கிறார்கள். இப்போது லீட்ஸில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் அபிமன்யு ஈஸ்வரனை நீக்கி மீண்டும் ஒரு தவறை செய்யாதீர்கள்" என முகமது கைஃப் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
சர்பராஸ் கான் 2024 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் எடுத்திருந்தும், அதற்கு அடுத்த போட்டியில் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை. அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அத்துடன் அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு எந்த சரியான காரணமும் இதுவரை சொல்லப்படவில்லை. தற்போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரரான அபிமன்யு ஈஸ்வரனுக்கும் அதே போல அணியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் போய்விடுமோ என முகமது கைஃப் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அபிமன்யு ஈஸ்வரன் தனது முதல் தர கிரிக்கெட் சாதனைகளுக்காக இந்திய அணியில் இடத்தைப் பிடிப்பாரா அல்லது சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications