மும்பை: இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை முதல் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் 5 சதம் அடித்தும் அந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்த சூழலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், ரிஷப் பண்ட் தன்னுடைய ஃபார்மை அடுத்த டெஸ்ட் போட்டியிலும் கொண்டு செல்வார் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை அவர் மகிழ்ச்சியாக செய்கின்றார். ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடிப்பது என்பது சாதாரண காரியம் கிடையாது.
ஒரு பேட்ஸ்மேன் ஆக மனதளவில் மிகப்பெரிய பலம் இருந்தால் மட்டுமே இதை சாதிக்க முடியும். அதை 48 மணி நேரம் இடைவேளையில் பண்ட் செய்து இருக்கிறார் என்றால் அவர் மிகச் சிறந்த வீரர். அது மட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் இங்கிலாந்து மண்ணில் விளையாடுவதை பண்ட் மகிழ்ச்சியாக எதிர்கொள்கின்றார்.
கடந்த சில மாதங்களாக பண்ட் சரியாக விளையாடவில்லை. இதனால் அவருக்கு ரன் பசி நிச்சயம் இருக்கும். இதனால் தன்னுடைய பார்மை இந்த தொடர் முழுவதும் கொண்டு செல்வார் என்று நம்புகிறேன். இதேபோன்று அணியில் இருக்கும் மற்றொரு சீனியர் வீரர் ஒருவர் தனது பார்மை தொடர் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
இதைத்தவிர அவருக்கு வேறு ஒரு வாய்ப்பே கிடையாது. நான் ராகுலை தான் குறிப்பிடுகின்றேன். இந்திய கிரிக்கெட்டுக்கு தற்போது ராகுல் மிகவும் முக்கியமான வீரராக மாறிவிட்டார். ஒரு டெஸ்டில் மட்டும் சிறப்பாக விளையாடும் வீரராகவோ இல்லை, ஒரு சதம் அடித்தால் போதும் என்ற வீரராகவோ ராகுல் இருக்கக் கூடாது. ராகுல் தொடர்ந்து இந்த தொடர் முழுவதும் அபாரமாக விளையாட வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.