மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகளைச் சமன் செய்துள்ளார். இந்தப் போட்டியில் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் பந்துகளை வீணடிக்காமல் ரன் குவிப்பதில் மட்டுமே கவனமாக இருந்து தனது சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன், இந்த போட்டியிலும் அதே ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் சாம்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் நழுவவிட்டார். அப்போது சாம்சன் 15 ரன்களில் இருந்தார்.
தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் விரட்டினார். குறிப்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரின் பந்துவீச்சில் அவர் அதிக ரன்களைக் குவித்தார். இறுதிவரை சிறப்பாக விளையாடிய அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்த இன்னிங்ஸின் மூலம் சஞ்சு சாம்சன் சில முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் 26 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் ஒரு இந்திய வீரர் அடித்த இரண்டாவது அதிவேக அரைசதம் இதுவாகும். இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் 20 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக உள்ளது.
மேலும், டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் ஒரு இந்திய வீரர் பதிவு செய்த அதிகபட்ச ரன்களையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு இதே வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் விராட் கோலி 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார்.

சஞ்சு சாம்சனுக்கு மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஜோடி 97 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்தது. இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்களும், சிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அனைத்து வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்களைக் குவித்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி பதிவு செய்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். சில நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது