சென்னை: சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது நீண்ட காலமாக சர்ச்சையாக இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாக அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால், தற்போது அவரது மாநில அணியான கேரள கிரிக்கெட் அமைப்புக்கும் அவருக்கும் இடையே மோதல் எழுந்து இருக்கிறது. இது குறித்து சஞ்சு சாம்சனின் தந்தை சில உண்மைகளை கூறி இருக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சு சாம்சன் இனி கேரள மாநில அணியில் இடம் பெறவே முடியாது என கேரளா மாநில கிரிக்கெட் அமைப்பு முடிவு செய்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாகவும், அப்போது சஞ்சு சாம்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மனமுடைந்து இருந்ததாகவும், அந்த சமயத்தில் ராகுல் டிராவிட் தொலைபேசியில் அழைத்து சஞ்சு சாம்சனுக்கு ஆறுதல் அளித்து, அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டி ஆட வழிவகை செய்தார் எனவும் சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் கூறி இருக்கிறார்.

இந்த தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அப்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் முக்கிய பொறுப்பில் இருந்த ராகுல் டிராவிட் சஞ்சு சாம்சனுக்கு உதவி இருக்கிறார். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிராவிட் பொறுப்பில் இருந்த போது சஞ்சு சாம்சனை அணியில் சேர்த்ததும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் கூறியது இதுதான். "ராகுல் டிராவிட் குறித்து நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஒருமுறை கேரளா கிரிக்கெட் அமைப்பு சஞ்சு சாம்சனை உடைத்து, அவரது கிரிக்கெட் வாழ்வை அழிக்க முயன்றது. அப்போது டிராவிட் அதில் தலையிட்டார். சஞ்சு சாம்சன் இன்று எந்த இடத்தில் இருக்கிறாரோ, அதற்கு நிச்சயம் ராகுல் டிராவிட் முக்கிய காரணம்."
"எங்களுக்கு அரவணைப்பு மற்றும் தாராள மனப்பான்மை காட்டிய யாரையும் நான் மறக்க மாட்டேன். சஞ்சு சாம்சனுக்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது கிரிக்கெட் உபகரணங்கள் முதற்கொண்டு அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள். அப்போது நாங்கள் அனைவரும் வீட்டில் சோகத்துடன் அமர்ந்து இருந்தோம்."
"அப்போது சஞ்சு சாம்சனுக்கு ராகுல் டிராவிட்-இடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சஞ்சு சாம்சன் அப்போது மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார். அவர் தொலைபேசியை எடுத்தவுடன் அழுதார். அன்று எங்கள் வீட்டின் மனநிலை மாறியது. தொலைபேசியை வைத்தவுடன் "ராகுல் டிராவிட் தான் பேசினார்" என்று கூறினார்."
மேலும், "சஞ்சு என்ன நடக்கிறது என்பது எனக்கு புரிகிறது. அவர்கள் உன் மீது பொறாமையுடன் செயல்படுகிறார்கள். அதைப் பற்றி நீ கவலைப்படாதே. உனது மன உறுதியை விட்டு விடாதே. இதை நான் பார்த்துக் கொள்கிறேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்ய நீ தயாராக இரு." என டிராவிட் கூறியதாக தெரிவித்தார். ராகுல் டிராவிட் கேரள கிரிக்கெட் அமைப்பை விட வேறு ஒரு தளத்தில் செயல்பட்டு வந்தார். அதனால், சஞ்சு சாம்சனை தனது அரவணைப்பில் வைத்துக் கொண்டார்." இவ்வாறு கூறினார் சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத்.