ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அறிமுக வீரர் சர்பராஸ் கான் திட்டிய சம்பவம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சர்பராஸ் கான் இருவரின் பார்ட்னர்ஷிப் முக்கிய காரணமாக அமைந்தது. 88 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 168 ரன்கள் சேர்த்தனர்.

சிறப்பாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 236 பந்துகளில் 214 ரன்களும், சர்பராஸ் கான் 72 பந்துகளில் 68 ரன்களும் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 200 ரன்கள் எடுத்ததை எதிர்முனையில் இருந்த சர்பராஸ் கான் கொண்டாடியது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் பேட்டிங்கின் போது ஜெய்ஸ்வாலை சர்பராஸ் கான் திட்டிய சம்பவமும் பேசுபொருளாகி வருகிறது.
ஒரு பக்கம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 190 ரன்களை எட்டிய போது, அதிரடியை குறைத்து கொண்டார். அதேபோல் சர்பராஸ் கான் விரைவாக அரைசதம் அடிக்க தீவிரமாக இருந்தார். இருவரும் இளம் வீரர்கள் என்பதால் இந்திய அணி நிர்வாகத்திற்கு மைல்கல் மூலம் தங்களது திறமையை நிரூபிக்க தீவிரமாக இருந்ததில் எந்த தவறும் இல்லை. இருவருமே மைல்கல் ரன்னை எடுக்க தீவிரம் காட்டிய போது, 94வது ஓவரை ரெஹான் அஹ்மத் வீசினார்.
அந்த ஓவரின் 4வது பந்தில் சர்பராஸ் கான் டீ கவர் திசையில் அடித்துவிட்டு விரைவாக முதல் ரன்னை எடுக்க, ஜெய்ஸ்வால் மித வேகத்தில் ஓடினார். இதன்பின் 2வது ரன்னை எடுக்க சர்பராஸ் கான் அழைக்க, ஜெய்ஸ்வால் அதனை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கோபமடைந்த சர்பராஸ் கான், 2வது ரன்னை பார்க்கவில்லையா என்று கோபமாக திட்டினார். இதேபோல் 95வது ஓவரில் ஜெய்ஸ்வால் 2வது ரன்னை எடுக்கும் முனைப்பில் அழைக்க, அதற்கு சர்பராஸ் கான் கண்டுகொள்ளாமல் ஒரு ரன்னை மட்டுமே எடுத்தார்.
இதனை வர்ணனையில் இருந்து பார்த்து கொண்டிருந்த ரவி சாஸ்திரி, மும்பையை சேர்ந்த இரு பேட்ஸ்மேன்களும் சிறு பிள்ளைகள் களத்தில் சண்டை போட்டுக் கொள்வதை பார்க்க முடுகிறது என்று கூறினார். அதேபோல் ரோகித் சர்மாவும் இவர்கள் இருவரின் செயல்களை ரசிக்கவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் ஒருவரின் வெற்றியை மற்றொருவர் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மும்பை அணியில் சர்பராஸ் கானுக்கு ஜெய்ஸ்வால் ஜூனியர் என்பதால், அந்த உரிமையில் திட்டியிருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.