லண்டன்: இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சிப் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரள வைத்திருக்கிறார் ஷர்துல் தாக்கூர். அவர் முதலில் பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். முன்னணி பந்துவீச்சாளர்களான பும்ரா விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
மற்ற பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். இந்த நிலையில் ஷர்துல் தாக்கூர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். அது போதாது என அடுத்து பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.

நேற்று நடந்த பயிற்சிப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பேட்டிங்கில் ஷர்துல் 68 பந்துகளில் 122 ரன்களை எடுத்து மிரட்டி இருக்கிறார். இதன் மூலம் நிதீஷ் குமார் ரெட்டிக்கு அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. அவரது இடத்தை ஷர்துல் தாக்கூர் எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்தில் முகாமிட்டு இருக்கிறது. அங்கு பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டி ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். அவரது பந்துவீச்சு மோசமாகவே இருந்தது.
அதே சமயம் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் ஓரளவு ரன் சேர்த்திருந்தார். தற்போது இந்தியா மற்றும் இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான பயிற்சிப் போட்டியிலும் அவர் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். நான்கு விக்கெட்டுகள் மற்றும் அதிரடியாக 122 ரன்கள் என மிரள வைத்திருக்கிறார். இந்தப் பயிற்சிப் போட்டியில் ஷர்துல் தாக்கூர்தான் அதிக ரன் குவித்த வீரராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து தாக்கூரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. அவரை சேர்க்க வேண்டும் எனில் மற்றொரு வேகப்பந்துவீச்சாளரை நீக்க வேண்டும் அல்லது ஆல்ரவுண்டர் என்ற அடையாளத்துடன் இருக்கும் நிதீஷ் குமார் ரெட்டியை நீக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் நிதீஷ் குமார் ரெட்டியைத்தான் நீக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் ஆஸ்திரேலியாவில் அடித்த ஒரு சதத்தைத் தவிர வேறு சிறப்பான செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. குறிப்பாக பந்துவீச்சில் அவர் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்கிறார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரிலும் அவரது பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டுமே மோசமாகவே இருந்தது.
எனினும், டெஸ்ட் போட்டிகளில் அவர் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங்கில் ஒரு அரை சதம் அடித்திருந்தாலும், அவரால் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவிக்க முடியவில்லை. மேலும் பந்துவீச்சிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதுவே அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இது ஷர்துல் தாக்கூருக்கு சாதகமான விஷயமாகவும் அமைந்துள்ளது.