கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் சிவம் துபே முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி இருப்பது ரசிகர்களின் மனதை சுக்கு நூறாக உடைத்து இருக்கிறது.
இந்திய அணி நாக் அவுட் போட்டிகளில் மோசமாக விளையாடி தோற்பது தொடர்கதையாக இருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதற்கு முடிவு கட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இங்கிலாந்து அணியால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் விராட் கோலி ஒன்பது ரன்களிலும், ரிஷப் பண்ட் நான்கு ரன்களிலும் ஆட்டமிழக்க கேப்டன் ரோகித் சர்மா மட்டும் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார்.
அதேபோன்று சூரிய குமார் யாதவ் முக்கிய கட்டத்தில் 47 ரன்களில் வெளியேற ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸர்கள் அடித்து 23 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில் சிவம் துபே பேட்டிங் செய்ய வந்தார். நடப்பு தொடரில் துபே, எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சிஎஸ்கே அணிக்கு அதிரடியாக விளையாடினார் என்ற ஒரே காரணத்தினால் சிவம் துபேவை நம்பி ரோகித் சர்மாவும் ராகுல் டிராவிட்டும் அணியில் சேர்த்தனர்.
ஆனால் உன்னை நம்பியதற்கு உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டாய் என்று வடிவேலுவை பார்த்து சத்யராஜ் கேட்பது போல் சிவம் துபே இந்தியாவின் மானத்தை வாங்கி விட்டார். இன்னும் சில பந்துகளை உள்ள நிலையில் சிவம் துபே அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் எதிர்கொண்ட முதல் பந்திலே கேட்ச் ஆகி கோல்டன் டக் ஆனார்.
இதனால் ரசிகர்கள் மனது சுக்கு நூறாக உடைந்து விட்டது. சிவம் துபேவை அணியை விட்டு நீக்க வேண்டும் என்றும் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் டிராவிட், ரோகித் சர்மா அவர் மீது நம்பிக்கை வைத்து சேர்த்தார்கள். ஆனால் சிவம் துபே சர்வதேச தரத்திற்கு சரியான வீரர் கிடையாது என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார். சிவம் துபேவை இப்படி தடுமாறி வரும் நிலையில் இந்த 2k கிட்ஸ் அவரை யுவராஜ் சிங்குக்கு ஒப்பிட்டு பேசி வருவது 90ஸ் கிட்ஸை எரிச்சல் அடைய செய்திருக்கிறது.