மும்பை : இந்திய அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை 4 வீரர்கள் இந்திய அணி சார்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். ரஜத் பட்டிதர், சர்பராஸ் கான், துருவ் ஜுரெல் மற்றும் ஆகாஷ் தீப். இவர்கள் 4 பேரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்ததற்கு பின் அவர்களின் ரஞ்சி டிராபி சாதனைகளே காரணமாக அமைந்துள்ளது.

இதன் மூலம் பிசிசிஐ தேர்வுக் குழு இந்திய டெஸ்ட் அணிக்கு ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களையே தேர்வு செய்வோம் என்று முடிவுக்கு வந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் மோசமான ஃபார்மில் இருக்கும் வீரர்களை ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்திய வீரர்கள் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் இருக்க கூடாது என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரடியாக கூறினார். ஆனால் இஷான் கிஷன் ஜனவரி மாதம் முதலே ஐபிஎல் தொடருக்காக ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். முழு ஃபிட்னஸ் உடன் இருந்தும் இஷான் கிஷன் ரஞ்சி டிராபியில் விளையாடாமல் இருந்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ரஞ்சி டிராபி போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடவும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 3 நாட்களுக்கு முன் முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி நாக் அவுட்டில் இருந்து விலகுவதாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து என்சிஏ தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் உட்பட எந்த இந்திய வீரருக்கும் புதிதாக காயம் ஏற்படவில்லை என்று பிசிசிஐ நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் பொய் கூறி ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடாமல் தவிர்த்தது வெளிப்படையாகவே தெரிந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்கு தயாராகி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீது பிசிசிஐ தரப்பில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரையும் நீக்க அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு முடிவு செய்துள்ளது.
பிசிசிஐ தரப்பில் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் இருவரும் வேண்டுமென்றே விளையாடாமல் இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ-ன் கிரேடு பி ஒப்பந்தத்தின் மூலமாக ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம் பெற்று வருகிறார். அதேபோல் இஷான் கிஷன் கிரேடு சி ஒப்பந்தம் மூலமாக ரூ.1 கோடி ஊதியம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.