IND vs ENG: வைபவ் சூர்யவன்ஷி தொடர்பான கேள்வி.. என் கைகள் கட்டப்பட்டு இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு
டர்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்பான கேள்விக்கு தனது கைகள் கட்டப்பட்டு இருப்பதாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறி இஐப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கேப்டன் ஸ்ரேயாஸ்க்கும், பயிற்சியாளர் கம்பீருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால், அணியின் ரகசியங்களை வெளியே கூற முடியாது என்ற பொருள்படும் வகையில், அவர் பேசி இருக்கலாம் என்று ஒருதரப்பினர் கூறியுள்ளனர். டர்ஹாமில் புதன் இரவு நடைபெறவுள்ள இப்போட்டியில் சூர்யவன்ஷி விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து நேரடியாகக் கேட்கப்பட்டபோது, அணியின் ரகசிய ஆலோசனைகளை வெளியில் கூறி எதிரணிக்கு சாதகமாக்க முடியாது என்று ஸ்ரேயாஸ் கூறினார்.

தனது 15-வது வயதில் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டதன் மூலம், மிகக் குறைந்த வயதில் இந்த பெருமையைப் பெற்ற வீரர் என்ற சாதனையைப் படைத்த சூர்யவன்ஷி, அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போதே அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், 2026 டி20 உலகக் கோப்பையை வென்று தந்த சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை உள்ளடக்கிய டாப் ஆர்டர் பேட்டிங் வரிசைக்கே அணி நிர்வாகம் முன்னுரிமை அளித்தது.
அயர்லாந்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா அதிர்ச்சிகரமாக இழந்ததைத் தொடர்ந்தும், சாம்சன் மற்றும் கிஷன் ஆகியோர் ரன் குவிக்கத் தடுமாறியதை அடுத்தும், சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்ள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "பாருங்கள், என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து இப்போது பேசவும் முடியாது. எனது கைகளும் கட்டப்பட்டுள்ளன, ஏனெனில் இது மிகவும் ரகசியமானது. இது நாங்கள் அணிக்குள் விவாதிக்கும் ஒரு விஷயம். நாங்கள் எந்த கூட்டணியுடன் விளையாடப் போகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்து, எதிரணியினருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த முடியாது.
ஆனால், அவர் நிச்சயமாக ஒரு அற்புதமான திறமைசாலி, அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்படுவார்" என்று கூறினார். பெஞ்சில் அமர்ந்திருக்கும் போது தங்களது எதிர்காலம் குறித்துக் கவலைப்படும் வீரர்களைக் கையாள்வது குறித்துக் கேட்கப்பட்டபோது, உலகக் கோப்பை வென்ற வீரர்களை அணியில் இருந்து நீக்காத முடிவை ஸ்ரேயாஸ் ஆதரித்துப் பேசினார்.
"இந்த அணியில் விளையாடிய ஒவ்வொரு தனிநபரும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். யாரோ ஒரு தனிநபர் மட்டுமே இதைச் செய்யவில்லை. ஆனால் நாம் வீரர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். அப்போதுதான் வரும் தொடர்களில் அவர்களின் நம்பிக்கை உயர்வாக இருக்கும். மேலும், முந்தைய உலகக் கோப்பையை வென்றவர்களுக்கு டி20 போட்டிகளில் எவ்வாறு விளையாட வேண்டும் என்ற அனுபவம் உள்ளது, மேலும் அவர்கள் இந்த ஃபார்மட்டின் முக்கிய தூண்களாக இருந்துள்ளனர். எனவே அவர்களுக்கு ஆதரவாக நிற்பது மிகவும் முக்கியம்," என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

