IND vs ENG: காலை வாரிய ராகுல், பண்ட்.. அணியை காப்பாற்றிய சுப்மன் கில், ஜெய்ஸ்வால்
பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருக்கிறது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் இன்று மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்த நிலையில் சர்துல் தாக்கூர் மற்றும் சாய் சுதர்சன் அதிரடியாக நீக்கப்பட்டிருந்தனர். அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்த சூழலில் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட இந்திய அணியில் கேஎல் ராகுல் 26 பந்துகளை எதிர் கொண்டு இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இதனை அடுத்து கருண் நாயர் மூன்றாவது வீரராக களமிறங்கினார். ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்த ஜோடிகள் அடுத்தடுத்து விரட்டியதால் இங்கிலாந்து அணி வீரர்கள் தடுமாறினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 80 ரன்கள் சேர்த்த நிலையில் மதிய ஆட்ட நேரம் வருவதற்கு ஒரு ஓவருக்கு முன்பு கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தில் வெளிப்படுத்தியது.
இதில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். இதன்பின் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த பண்ட், இம்முறையும் பட்டையை கிளப்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஷோயிப் பஷீர் ஓவரின் சிக்சர் அடிக்க முற்பட்டு பவுண்டரி லைனில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார்.
இந்த சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ஒரு ரன்னில் வெளியேறினார். இதனால் இந்திய அணி இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட் இழந்து சரிவை நோக்கி சென்றது. இதனால் 211 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இந்தியா இழந்து தடுமாறியது. முதல் டெஸ்ட் போல் இந்திய அணி இரண்டாவது டெஸ்டிலும் சொதப்ப போகிறது என ரசிகர்கள் நினைத்தனர். அப்போது ஜோடி சேர்ந்த கில், ஜடேஜா ஆகியோர் நிதானமாக விளையாடினர்.
ஜடேஜா தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஒரு முனையில் நங்கூரமிட்டு பௌண்டரிகளை அடித்தார். மறுமுனையில் கேப்டன் கில் தன்னுடைய திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 199 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சதம் அடித்து கில் சாதித்தார். முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி 85 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருக்கிறது.
எனினும் இங்கிலாந்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் இந்திய அணி எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தற்போது இந்த ஜோடிக்கு பின் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தான் பேட்ஸ்மேன் ஆக இருக்கின்றார். இதனால் குறைந்தபட்சம் இந்திய அணி 400 ரன்களை கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications