மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை விளாசிய ஆசிய வீரர் என்ற புதிய சாதனையை இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் படைத்துள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் விளாசிய இந்திய ஜாம்பவான் விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3வது நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 544 ரன்களை குவித்திருந்தது. இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

அவரின் அதிரடி காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களை குவித்தது. இதன் மூலமாக இங்கிலாந்து 311 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செய்து வருவதாக பார்க்கப்பட்டது. இதன்பின் இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். இதன்பின் கேஎல் ராகுல் - சுப்மன் கில் கூட்டணி இணைந்தது. கேஎல் ராகுல் நங்கூரம் போட்டதை போல் நிதானமாக விளையாட, மறுபக்கம் சுப்மன் கில் அதிரடியாக ரன்களை குவித்தார். இந்த டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் அபாரமான ஃபார்மில் இருக்கிறார்.
ஏற்கனவே ஒரு இரட்டை சதம் உட்பட 3 சதங்களை சுப்மன் கில் விளாசியுள்ள நிலையில், இந்த இன்னிங்ஸில் ஏராளமான சாதனைகளை படைக்கும் வாய்ப்பு சுப்மன் கில்லுக்கு கிடைத்தது. இந்த இன்னிங்ஸில் 13 ரன்களை சுப்மன் கில் விளாசிய போது, இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார்.
2006ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் முகமது யூசுப் 4 போட்டிகளில் 631 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் படைத்துள்ளார். அதேபோல் இங்கிலாந்து மண்ணில் விராட் கோலியின் சாதனையையும் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகளில் ஆடிய விராட் கோலி 2 சதங்கள், 2 அரைசதங்கள் உட்பட 655 ரன்களை விளாசி இருந்தார். இந்த போட்டியில் 37 ரன்களை கடந்த போது சுப்மன் கில் விராட் கோலியின் சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் சுப்மன் கில் சதம் விளாசினால், இன்னும் சில சாதனைகளை முறியடிக்க முடியும்.