கொல்கத்தா: இந்திய அணியில் தற்போது அடுத்த தலைமுறை வீரர்களில் அபாரமாக பேட்டிங் மற்றும் கேப்டன்சி செய்கிறார் என்றால், அது ஸ்ரேயாஸ் ஐயர் தான். கடினமான ஐபிஎல் தொடரில் பஞ்சாப், டெல்லி போன்ற அணிக்கு தலைமை தாங்கி பைனல் வரை அழைத்து சென்றதும், கொல்கத்தா அணிக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கடந்த 2025ஆம் ஆண்டு வென்று தந்ததும் தான் இதற்கு எடுத்துக்ககாட்டு.
அது மட்டும் இல்லாமல் 2023 உலக கோப்பை தொடரில் கீழ்வரிசையில் களமிறங்கி 500 ரன்களுக்கு மேல் அடித்தது, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றது, ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே, சையது முஸ்தாக் அலி போன்ற தொடரில் அபாரமாக விளையாடுவது என அனைத்தையும் ஸ்ரேயாஸ் செய்துவிட்டார்.

ஆனால், அவருக்கு இந்திய அணியின் 3 பிரிவுகளிலும் இடம் கிடைப்பதில்லை. கேப்டன் பொறுப்புக்கு கூட பரீசிலிக்கப்படுவதில்லை. இந்த சூழலில் தான் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஸ்ரேயாஸ் இடம்பெறவில்லை. இதற்கு தான் கங்கலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, ரோகித் இல்லாத நிலையில், ஸ்ரேயாஸுக்கு கண்டிப்பாக இடம் தந்து ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "கடந்த ஒரு வருடமாக ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமாக விளையாடி வருகிறார். அவரை அணியில் சேர்க்காமல் விட்டது தவறு. கடந்த 12 மாதங்களில் அவர் காட்டிய ஆட்டத்திறனைப் பாருங்கள்."
"இப்படிப்பட்ட ஒரு வீரரை அணியை விட்டு விலக்கியிருக்கக் கூடாது. அழுத்தமான சூழல்களிலும் ரன்கள் சேர்க்கும் திறன் அவரிடம் உள்ளது. பொறுப்புடன் விளையாடுவதோடு, குறுகிய பந்துகளையும் சிறப்பாக எதிர்கொள்கிறார்."
"டெஸ்ட் கிரிக்கெட் வேறு விதமானது என்றாலும், நான் அவரை அணியில் சேர்த்திருப்பேன். ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். இந்திய அணி இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற வேண்டுமெனில் இரண்டு விஷயங்கள் முக்கியம்.
"ஒன்று, இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டும். மற்றொன்று, பும்ரா தொடர் முழுவதும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். 2020-21 ஆஸ்திரேலிய தொடரில் மெல்போர்னில் நாம் வெற்றி பெற்றபோது கூட கோலியும் ரோஹித்தும் இல்லை. எனவே, இந்தத் தொடரில் நாம் வெற்றி பெற முடியாது என்று சொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை," என்று கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.