Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஆட்டத்தை பாதியில் நிறுத்தியதால் பிராட் ஆவேசம்.. அம்பயர்களின் 'சோம்பேறித்தனம்' என விளாசல்

லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்ட அம்பயர்களின் முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், இந்த முடிவை 'சோம்பேறித்தனமானது' என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசிப் பகுதியில், இந்திய அணி அபாரமாகப் பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதனால், வெற்றிக்கு அருகே இருந்த இங்கிலாந்து அணி திடீரென தடுமாறியது.

IND vs ENG Stuart Broad Slams Umpires for Lazy Decision to Stop Play Early in Oval Test

ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தை நிறுத்துவதாக அம்பயர்கள் அறிவித்தனர். சிறிது நேரத்தில் மழையும் பெய்யத் தொடங்கியது. மழை நின்றபோதும், ஆட்டத்தை அன்றைய தினத்திற்கு முடித்துக்கொண்டு, ஐந்தாவது நாளுக்கு ஒத்திவைப்பதாக அம்பயர்கள் அறிவித்தது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

ரசிகர்களை ஏமாற்றிய சோம்பேறித்தனமான முடிவு: பிராட் ஆவேசம்

அம்பயர்களின் இந்த முடிவு குறித்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது ஒரு 'சோம்பேறித்தனமான முடிவு' என்று அவர் வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில், "ஆட்டத்தை மீண்டும் தொடங்க இன்னும் 20 நிமிடங்கள் இருந்தன. ரயில் நிலையத்தில் இருந்த அனைவருமே கூலிங் கிளாஸ் அணிந்திருந்தனர் (அந்த அளவிற்கு வெளிச்சம் இருந்தது). இந்த டெஸ்ட் போட்டியின் முடிவை ரசிகர்கள் இன்றே பார்த்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மாலை 6 மணிக்கே ஆட்டத்தை முடித்துக்கொண்டது ஒரு சோம்பேறித்தனமான முடிவு. இந்த முடிவை யார் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை?" என்று பதிவிட்டுள்ளார்.

ஆட்டம் நிறுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே ஓவல் மைதானத்தில் நல்ல சூரிய வெளிச்சம் வந்ததாகவும், அம்பயர்கள் விதிகளில் சற்று நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருந்தால், நான்காம் நாளிலேயே போட்டியின் முடிவை எட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விதிகளின்படி, இந்திய நேரப்படி இரவு 11:12 மணி வரை ஆட்டத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பிருந்தும், அம்பயர்கள் சுமார் 11 மணிக்கே ஆட்டத்தை முடித்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாருக்கு சாதகம்?

தற்போது, இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 35 ரன்கள் தேவை. அதே சமயம், இந்திய அணிக்குத் தொடரை சமன் செய்ய 4 விக்கெட்டுகள் தேவை. ஐந்தாம் நாள் ஆடுகளத்தில் ஹெவி ரோலரைப் பயன்படுத்த இங்கிலாந்துக்கு வாய்ப்பு இருப்பதால், ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக மாறலாம். இது அவர்களுக்குச் சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் புத்துணர்ச்சியுடன் ஐந்தாம் நாளில் பந்துவீசுவார்கள் என்பதால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. மொத்தத்தில், ஒரு பரபரப்பான முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்திய அம்பயர்களின் முடிவு, ரசிகர்களைப் போலவே பல முன்னாள் வீரர்களையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

Story first published: Monday, August 4, 2025, 8:27 [IST]
Other articles published on Aug 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+