IND vs ENG: அந்த தம்பியை யாராவது கூப்பிட்டு பேசுங்க.. பேட்டிங் தப்பா இருக்கு.. கவாஸ்கர் அறிவுரை
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் வெறும் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த தொடரில் சதம் அடித்து நல்ல தொடக்கத்தை பெற்ற ஜெய்ஸ்வால், அதன்பிறகு பெரிய அளவு சோபிக்கவில்லை.
முதல் இரண்டு டெஸ்டில் 4 இன்னிங்ஸில் 220 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்திருந்தார். அதில் அவருடைய சராசரி 55 என்ற அளவில் இருந்தது. ஆனால் மூன்றாவது டெஸ்டில் இருந்து கணக்கிட்டால் கடைசியாக விளையாடிய ஐந்து இன்னிங்சில் மொத்தமே அவர் 73 ரன்கள் தான் அடித்து இருக்கின்றார்.

இதில் அவருடைய சராசரி 14. இதில் ஒரு அரை சதம் அடங்கும். இதனால் ஜெய்ஸ்வால் கடைசி மூன்று டெஸ்டுகளில் சரியாக விளையாடவில்லை என்று குற்றச்சாட்டு இருந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஜெய்ஸ்வால்விடம் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், பேட்டிங் செய்யும்போது இந்த ஷாட்டை ஆடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றார். திடீரென்று அவர் நம்பிக்கை குறைந்து காணப்படுகின்றார். முதல் டெஸ்டில் சதம் அடித்த பிறகு அவர் பேட்டிங்கில் லாவகமாக விளையாடுவது கிடையாது. இதற்கு காரணம் அவருடைய முன் கால் எப்போதும் போல் ஷாட் ஆடும் போது முன் வருவது இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால் அவர் நிச்சயம் நல்ல வீரர் தான். ஏதேனும் ஒரு மூத்த வீரர் அவருடன் அமர்ந்து சில பேட்டிங் யுக்தி குறித்து பேச வேண்டும். காலை எப்படி எடுத்து வைக்க வேண்டும்? பேட்டிங் செய்யும்போது தோள்பட்டைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினால் நிச்சயம் அது அவருக்கு உதவும்.
தற்போது அவருடைய பின் தோள்பட்டை முதல் ஸ்லிப் அல்லது இரண்டாவது ஸ்லீப்பை நோக்கி இருக்கின்றது. அப்படி இருக்கும் போது அவருடைய பேட் சரியான நேரத்தில் கீழே வந்து நேரடியாக விளையாடுவது கடினமாக மாறிவிடுகிறது. அவருடைய தோள்பட்டை விக்கெட் கீப்பர் திசை நோக்கி இருந்தால் அவருடைய பேட் நேராக ஷாட் அடிக்க ஏதுவாக இருக்கும் என்ற கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications