பாயை போட்டு படுத்துட்டான் இந்த பையன்.. தமிழக வீரர் சாய் சுதர்சன் மிரட்டல்.. ஜஸ்ட் மிஸ்ஸான சதம்!
அகமதாபாத் : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 208 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து சதத்தை மிஸ் செய்தார்.
தமிழக வீரர் சாய் சுதர்சனின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் டிஎன்பிஎல், கவுண்டி கிரிக்கெட், இந்திய ஏ அணி என்று விளையாடி வந்த சாய் சுதர்சன், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். டாப் ஆர்டர் தொடக்க வீரர் என்பதால், அடுத்தடுத்த வாய்ப்புகள் நிச்சயம் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா மண்ணில் அடுத்தடுத்த 2 போட்டிகளில் அரைசதம் விளாசி அனைவரின் கவனத்தையும் சாய் சுதர்சன் ஈர்த்தார். அதேபோல் சாய் சுதர்சனை தயார்ப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ-யும் அவரை இந்திய ஏ அணிக்கு தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி விளையாடிய நிலையில், தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 553 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி ரஜத் பட்டிதரின் அபாரமான ஆட்டத்தால் 227 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் கைகள் ஓங்கியது. பின்னர் 2வது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 29.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்தது. இதனால் இந்திய அணிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் டக் அவுட்டாகியும், ரஜத் பட்டிதார் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்த நிலையில் களத்தில் இருந்த சாய் சுதர்சன் புஜாராவை போல் களத்தில் பாயை போட்டு படுத்தேவிட்டார். அவரும் மனவ் சுதரும் ஆடிய ஆட்டம் இங்கிலாந்து பவுலர்களை மிரள வைத்தது.
சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 97 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் கேஎஸ் பரத் சதம் விளாசிய இந்திய ஏ அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். 2வது இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 425 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications