மும்பை: ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு தற்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு இந்த போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இழந்த மானத்தை மீட்க வேண்டும் என்றால் இங்கிலாந்தில் வெற்றி பெற வேண்டும். கடந்த முறை சுற்றுப்பயணத்தின் போது தொடர் சமனில் முடிவடைந்தது.

இங்கிலாந்து மண்ணில் கடைசியாக இந்திய அணி 2007 ஆம் ஆண்டு தான் தொடரை வென்றது. ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா பேட்டிங் மட்டுமில்லாமல் பந்து வீச்சிலும் சொதப்பியது. பும்ராவை தவிர மற்ற எந்த ஒரு வீரர்களும் பெரும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கில் பல அதிரடி மாற்றங்கள் தற்போது நிகழ இருக்கிறது.
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் விலகிய நிலையில் இளம் வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த சூழலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் பும்ராவுடன் மேலும் ஒரு நட்சத்திர ஸ்டார் வீரர் இணைய இருக்கின்றார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஆர்ஸ்தீப்பை சேர்க்க கௌதம் கம்பீர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதுவரை ஆர்ஸ்தீப் சிங் 9 ஒருநாள் போட்டியில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சர்வதேச t20 கிரிக்கெட்டில் 63 போட்டியில் விளையாடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேசடி20 வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையும் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு இருக்கின்றது. இந்த சூழலில் ஆர்ஸ்தீப் சிங்கை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சேர்க்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அவர் ஏற்கனவே 21 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் இங்கிலாந்தில் ஏற்கனவே கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார். தற்போது முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில் ஆர்ஸ்தீப் இணைந்தால் இந்திய அணியின் பௌலிங் படை பலமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.