மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி நம்ப முடியாத வகையில் டிரா செய்து, தோல்வியிலிருந்து தப்பியது. அதன் மூலம், இந்த டெஸ்ட் தொடரை கடைசி போட்டி வரை உயிர்ப்புடன் வைத்திருந்தாலும், ஒரு விரும்பத்தகாத உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது. மான்செஸ்டர் மைதானத்தில் 89 ஆண்டுகளாக வெற்றி பெறாத தனது சோகமான வரலாற்றை இந்திய அணி மேலும் நீட்டித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 0-2 எனத் தடுமாறியது. இனி இந்தியாவின் தோல்வி உறுதி என்று அனைவரும் நினைத்த நிலையில், ஒரு வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் அரங்கேறியது.

கே.எல். ராகுல் (90), கேப்டன் சுப்மன் கில் (103), ரவீந்திர ஜடேஜா (107*), மற்றும் வாஷிங்டன் சுந்தர் (101*) ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால், இந்திய அணி கடைசி ஐந்து செஷன்களில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 425 ரன்கள் குவித்தது. இறுதியில், அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும், இந்த டெஸ்ட் தொடர் 2-1 என இங்கிலாந்து அணிக்கு சாதகமாக உள்ளது.
இந்திய அணி இந்தப் போட்டியில் தோல்வியிலிருந்து தப்பித்த விதம் பாராட்டப்பட்டாலும், ஒரு மோசமான சாதனையைப் படைத்துள்ளது. மான்செஸ்டர், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா விளையாடிய 10வது டெஸ்ட் போட்டி இதுவாகும். ஆனால், இன்றுவரை ஒரு போட்டியில் கூட இந்தியாவால் இங்கு வெற்றி பெற முடியவில்லை.
1936ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை 4 போட்டிகளில் தோல்வியையும், 6 போட்டிகளில் டிராவையும் சந்தித்துள்ளது. இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 10 போட்டிகளுக்கு மேல் விளையாடி ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாத ஒரே அணி என்ற விரும்பத்தகாத உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
ஒரு மைதானத்தில் வெற்றி பெறாமல் அதிக போட்டிகளில் விளையாடிய அணிகளின் பட்டியல்:
லண்டனில் முகாமிட்டுள்ள விராட் கோலி.. சிஷ்யனுக்காக கடைசி டெஸ்ட் போட்டியை பார்க்க வருவாரா?
இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தனது 9வது முயற்சியில் முதல் வெற்றியைப் பதிவு செய்து இந்தியா வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மோசமான சாதனையை லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூலை 31) தொடங்கும் கடைசி டெஸ்டில் மாற்றியமைக்க இந்திய அணி முயற்சிக்கும்.