IND vs ENG: கிரிக்கெட் வரலாற்றிலேயே இல்லாத மாபெரும் சாதனை.. 9 வீரர்கள் இணைந்து செய்த மெகா ரெக்கார்டு
லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2025 ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு அரிய உலக சாதனை நிகழ்ந்துள்ளது. பந்துவீச்சாளர்கள் திணறும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தத் தொடரில், அதிக இரு அணி பேட்ஸ்மேன்களும் இணைந்து இந்த உலக சாதனையை படைத்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே தொடரில் 9 பேட்ஸ்மேன்கள் 400 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளனர். இது பேட்டிங்கிற்கு எவ்வளவு சாதகமான தொடராக அமைந்தது என்பதற்கு ஒரு சான்றாகும். இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே ஒரு தொடரில் 8 பேட்ஸ்மேன்கள் 400 ரன்களைக் கடந்திருந்தனர்.
- 9 பேட்ஸ்மேன்கள் - இந்தியா vs இங்கிலாந்து, 2025
- 8 பேட்ஸ்மேன்கள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, 1975/76
- 8 பேட்ஸ்மேன்கள் - தி ஆஷஸ், 1993

400 ரன்களுக்கும் மேல் சேர்த்த ஒன்பது பேட்ஸ்மேன்கள் பட்டியல்:
- சுப்மன் கில் (இந்தியா) - 5 போட்டிகள், 10 இன்னிங்ஸ் - 754 ரன்கள் - 4 சதம், 0 அரைசதம்.
- கே.எல். ராகுல் (இந்தியா) - 5 போட்டிகள், 10 இன்னிங்ஸ் - 532 ரன்கள் - 2 சதம், 2 அரைசதம்.
- ரவீந்திர ஜடேஜா (இந்தியா) - 5 போட்டிகள், 10 இன்னிங்ஸ் - 516 ரன்கள் - 1 சதம், 5 அரைசதம்.
- ரிஷப் பண்ட்(இந்தியா) - 4 போட்டிகள், 7 இன்னிங்ஸ் - 479 ரன்கள் - 2 சதம், 3 அரைசதம்.
- பென் டக்கெட் (இங்கிலாந்து) - 5 போட்டிகள், 9 இன்னிங்ஸ் - 462 ரன்கள் - 1 சதம், 3 அரைசதம்.
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 5 போட்டிகள், 9 இன்னிங்ஸ் - 455 ரன்கள் - 2 சதம், 1 அரைசதம்.
- ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து) - 5 போட்டிகள், 8 இன்னிங்ஸ் - 432 ரன்கள் - 1 சதம், 2 அரைசதம்.
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) - 5 போட்டிகள், 10 இன்னிங்ஸ் - 411 ரன்கள் - 2 சதம், 2 அரைசதம்.
- ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து) - 5 போட்டிகள், 9 இன்னிங்ஸ் - 409 ரன்கள் - 1 சதம், 2 அரைசதம்.
இங்கிலாந்து அணியின் 'பேஸ்பால்' (Bazball) அதிரடி ஆட்டமும், அதற்குச் சற்றும் சளைக்காமல் இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுத்ததுமே இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இரு அணி வீரர்களும் ரன் குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆடியதால், இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
சாதனைகளுக்கு மகுடம் சூட்டும் 5-வது டெஸ்ட்!
இந்த சாதனைகளுக்கு இடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தன. இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி சதம் கடந்த 118 ரன்கள் விளாசினார். யாரும் எதிர்பாராத விதமாக, நைட்வாட்ச்மேனாக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் கடந்து 66 ரன்கள் சேர்த்தார்.
மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா (53) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (53) ஆகியோர் தங்களது பங்கிற்கு அதிரடியாக ஆடி அரைசதங்கள் அடித்தனர். குறிப்பாக, வாஷிங்டன் சுந்தர் வெறும் 36 பந்துகளில் 53 ரன்கள் விளாசி, இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இந்தச் சிறப்பான பேட்டிங்கால், இந்திய அணி இங்கிலாந்துக்கு 374 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
இந்த இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி, நல்ல தொடக்கத்தை அமைத்தது. ஆனால், மூன்றாம் நாள் ஆட்டத்தின் கடைசிப் பந்தில், முகமது சிராஜ் தனது மாயாஜால யார்க்கர் மூலம் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலியை 14 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாக்கி, இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.


Click it and Unblock the Notifications