மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐந்து கேட்ச்களை நழுவவிட்டார். ஸ்லிப் ஃபீல்டராக இருந்த அவர், ஐந்து கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டது இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் என ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவரை விமர்சித்து வருகின்றனர். சுனில் கவாஸ்கர் அவரை மிக மோசமாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் இந்திய அணி ஃபீல்டிங் பயிற்சியாளரான ஆர். ஸ்ரீதர் ஜெய்ஸ்வாலுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். வர்ணனையாளர் அறையில் அமர்ந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் ஆடுகளத்தில் இருக்கும் அனுபவங்களை மனதில் வைத்து பேச வேண்டும் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஜெய்ஸ்வால் கேட்ச்களைச் சரியாகப் பிடிக்காமல் விட்டதற்கு இங்கிலாந்தில் நிலவும் குளிரான சூழ்நிலைதான் காரணம் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும், இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் டியூக் வகை பந்து ஃபீல்டரை நோக்கி வரும்போது நேரான கோட்டில் வராமல் சற்று ஆட்டம் காட்டும் எனவும் கூறியிருக்கிறார். அதேபோல, லீட்ஸ் மைதானம் சமதளமாக இருக்காது என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதுகுறித்து ஆர். ஸ்ரீதர் பேசியதாவது: "இங்கிலாந்துக்கு முதல் முறையாகச் சென்று நல்ல ஸ்லிப் ஃபீல்டராக இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. நீங்கள் அதற்காக என்ன வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். ஆனால், போட்டிச் சூழ்நிலையில் அது மிகவும் கடினமாக இருக்கும். அங்குள்ள சூழ்நிலை மிகவும் குளிராக இருக்கும். எனவே உங்கள் விரல்கள் விரைந்து போயிருக்கும்.
மேலும், டியூக் வகை பந்துகள் நம்மை நோக்கி வரும்போது சற்று ஆட்டம் காட்டும். அதைக் கேட்ச் பிடிப்பது எளிதான காரியம் இல்லை. இங்கிலாந்தில் நமது பார்க்கும் திறனுக்கும் சில சவால்கள் உள்ளன. அங்குள்ள ஓவல் மற்றும் லீட்ஸ் போன்ற மைதானங்கள் மற்ற மைதானங்களை விட சவாலானவை. லீட்ஸ் மைதானத்தில் பெவிலியன் முனை முதல் மற்றொரு முனை வரை மைதானம் சரிவாக இருக்கும். அங்கு அதிக காற்று அடிக்கும். அது உங்களின் ஆழமாகப் பார்க்கும் திறனைப் பாதிக்கும்.
இங்கிலாந்து வீரர்களும் இந்தப் போட்டியில் கேட்ச்களை தவறவிட்டிருந்தனர். எனவே, இது உங்கள் திறன் சார்ந்த விஷயம் இல்லை. இது அங்கு நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தது. ஜெய்ஸ்வால் கல்லி (gully) ஃபீல்டர் ஆவார். அதில் அவர் தவறு செய்ததே இல்லை. அவர் இரண்டு போட்டிகளில்தான் ஃபீல்டிங்கில் சொதப்பி இருக்கிறார். ஒன்று மெல்போர்னில் நடந்தது. மற்றொன்று லீட்ஸ் நகரில் இப்போது நடந்தது. மற்றபடி அவர் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிராகக் கான்பூர் மைதானத்தில் அவர் அற்புதமாக கேட்ச்களைப் பிடித்திருந்தார். வர்ணனையாளர் அறையில் அமர்ந்து கொண்டு பேசுவது மிகவும் எளிது. அங்கு அமர்ந்துகொண்டு வீரர்களை விமர்சிக்கலாம். ஆனால், இந்தச் சவாலான சூழ்நிலைகள் மற்றும் முதல் முறையாக இந்தச் சூழ்நிலையை அனுபவிப்பது ஆகியவைதான் அவற்றிற்குக் காரணம்" என்று ஸ்ரீதர் விளக்கம் அளித்தார்.