லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி பெற்ற 6 ரன் வெற்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் இல்லாத இளம் அணி, தொடரை சமன் செய்து சரித்திரம் படைத்ததை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி-யும், தீவிர கிரிக்கெட் ரசிகருமான சசி தரூர், இந்திய அணியின் வெற்றிக்கு புகழாரம் சூட்டியதோடு, முன்னர் அணியின் திறனை சந்தேகப்பட்டதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். நேற்று கோலி வேண்டும் என்று பதிவிட்ட அவர், இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி பீடுநடை போட்டது. ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் சதங்களால் இங்கிலாந்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது, இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது போன்ற சூழல் நிலவியது.

அந்த நேரத்தில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது எக்ஸ் (X) பக்கத்தில், "இந்த தொடரில் பலமுறை விராட் கோலி-யை மிஸ் செய்தேன். ஆனால், இந்த டெஸ்டில் அவரைப்போல வேறு யாரையும் மிஸ் செய்யவில்லை. அவரது ஆக்ரோஷம், களத்தில் அவரது இருப்பு, பேட்டிங் திறமை ஆகியவை வேறு ஒரு முடிவைத் தந்திருக்கும். அவரை ஓய்விலிருந்து திரும்ப அழைக்க இதுதான் சரியான நேரமா? விராட், தேசத்திற்கு நீங்கள் தேவை!" என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
ஆனால், ஐந்தாம் நாள் ஆட்டத்தில் எல்லாம் தலைகீழாக மாறியது. முகமது சிராஜ்-இன் அனல் பறக்கும் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த அபார வெற்றியைக் கண்ட சசி தரூர், தனது முந்தைய நிலைப்பாட்டிற்காக வருத்தம் தெரிவித்து புதிய பதிவை வெளியிட்டார்.
அதில், "சொற்கள் வரவில்லை... என்ன ஒரு வெற்றி! இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரை சமன் செய்த இந்திய அணிக்காக மிகவும் மகிழ்ச்சியாகவும், பரவசமாகவும் உணர்கிறேன். வீரர்கள் வெளிப்படுத்திய மன உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் பேரார்வம் நம்பமுடியாதது" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "இந்த அணி ஒரு ஸ்பெஷலான அணி. நேற்று ஆட்டத்தின் முடிவு குறித்து நான் சந்தேகப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், முகமது சிராஜ் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடவில்லை! நமது ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள்!" என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
கடைசி நாளில் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் தேவை என்ற நிலையில், 4 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்து களமிறங்கியது. வெற்றி இங்கிலாந்துக்குத்தான் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், முகமது சிராஜ் ஒரு புயலைப் போல பந்துவீசினார். தனது வேகத்தாலும், துல்லியமான யார்க்கர்களாலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்த அவர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்து, இந்தியாவிற்கு ஒரு சரித்திர வெற்றியைத் தேடித் தந்தார். அவர் இந்தப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
சசி தரூரின் இந்த மனமாற்றம், இந்திய இளம் அணியின் திறனை மீண்டும் ஒருமுறை உலகிற்கு பறைசாற்றுகிறது. விராட் கோலி போன்ற ஒரு மாபெரும் வீரரின் இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் திறமையான வீரர்களின் கைகளில் பாதுகாப்பாக உள்ளது என்பதை இந்த வெற்றி உணர்த்துகிறது.
நேற்று விராட் கோலி வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பல ரசிகர்களும், இன்று சுப்மன் கில்-லின் தலைமை, சிராஜின் வேகம் மற்றும் இளம் வீரர்களின் கூட்டு முயற்சியை எண்ணி பெருமையாக பேசி வருகின்றனர். சசி தரூரின் ட்வீட், இந்த பொதுவான மனநிலையின் ஒரு பகுதியாகவே உள்ளது. இது, தனிப்பட்ட வீரர்களை விட அணியே பெரியது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.