“நல்லா ஐபிஎல் ஆடுறார் அவருக்கெல்லாம் இந்திய அணியில் இடமில்லை”.. ஸ்ரேயாஸ்-ஐ வெளியேற்ற திட்டம்
மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற விவாதம் நடந்து வரும் நிலையில், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அவரது தற்போதைய ஐபிஎல் ஆட்டம் சுட்டிக்காட்டப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி வருகிறார். ஆனால், அதுவே அவரது டெஸ்ட் போட்டி வாய்ப்புக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் பார்த்தால், 2025 ஐபிஎல் தொடர் தான் ஸ்ரேயாஸ் ஐயரின் மிகச்சிறந்த ஐபிஎல் ஆட்டம் ஆகும்.

இந்த ஆண்டு அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 12 இன்னிங்ஸ்களில் 435 ரன்கள் எடுத்துள்ளார். அந்த அணி இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில், அவர் மேலும் ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது. அவரது பேட்டிங் சராசரி இந்த ஆண்டு 48.33 என்பதாகவும், ஸ்ட்ரைக் ரேட் 174.69 ஆகவும் உள்ளது.
தனது மிகச்சிறந்த டி20 ஆட்டத்தை ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், அவரது பேட்டிங் பாணி மாறிவிட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. அது ஒருநாள் போட்டிகளுக்கும் மற்றும் டி20 போட்டிகளுக்கும் சாதகமான விஷயமாக இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் இது போன்ற அதிரடி பேட்டிங்குடன் ஆட முடியாது என சுட்டிக்காட்டப்படுகிறது.
அதாவது, ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது பேட்டிங் செய்ய நிற்கும் விதமும், அவரது ஸ்ட்ரோக் அடிக்கும் விதமும், ஆட்டமிழப்பதைப் பற்றி சற்று யோசிக்காமல் ஆடுவதும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தகுந்ததாக இருக்கும். ஆனால், டெஸ்ட் போட்டிக்கு அது சரிப்பட்டு வராது எனத் தேர்வு குழுவினர் கருதுவதாகத் தகவல் கூறப்படுகிறது.
தேர்வு குழுவினர் ஸ்ரேயாஸ் ஐயரின் டெஸ்ட் போட்டி ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை எனக் கூறப்படும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு (2024-25) ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 480 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அப்படி இருந்தும் அவரை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவே இது சுட்டிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications