மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் போது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டி டிராவில் முடிந்ததாகக் கருதி கை கொடுக்க வந்தபோது, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கை கொடுக்க மறுத்தது கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்தச் சம்பவம் நடந்து சில காலம் ஆன நிலையில், அது குறித்து வாஷிங்டன் சுந்தர் தற்போது மனம் திறந்துள்ளார். அந்தப் பரபரப்பான தருணத்தில் என்னதான் நடந்தது?

இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மிகப்பெரிய ஸ்கோர் குவிக்க, இந்தியா தோல்வியைத் தவிர்க்கப் போராடிக் கொண்டிருந்தது. அப்போது, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும், ரவீந்திர ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து, இந்தியாவுக்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் தங்களது டெஸ்ட் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். சுந்தருக்கு அதுவே முதல் டெஸ்ட் சதமாக இருக்கும் என்பதால் அவருக்கு பதற்றம் அதிகமாகவே இருந்தது.
போட்டியின் கடைசி செஷன். ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்னும் சுமார் 15 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இனி இரு அணிகளும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதால் போட்டி டிராவில் முடிந்துவிட்டது என்பதை உணர்த்தும் விதமாக, ஜடேஜாவை நோக்கி கை கொடுக்க வந்தார். வழக்கமாக, ஆட்டம் டிராவில் முடியும்போது இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். இங்கிலாந்து கேப்டனின் அந்த கோரிக்கையை இந்திய அணி ஏற்றால் கை குலுக்கி அப்போதே போட்டியை டிரா செய்து கொண்டு இருக்கலாம்.
ஆனால், பென் ஸ்டோக்ஸின் டிரா கோரிக்கையை பேட்டிங் செய்து கொண்டு இருந்த ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் ஏற்கவில்லை. இருவரும் தங்களது சதத்தைப் பூர்த்தி செய்வதில் குறியாக இருந்தனர். அதனால், ஸ்டோக்ஸ் கை கொடுக்க வந்தபோது, அதை மறுத்துவிட்டு தொடர்ந்து பேட்டிங் செய்ய முடிவெடுத்தனர். இது ஸ்டோக்ஸ் மற்றும் சில இங்கிலாந்து வீரர்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
"உங்கள் சதத்திற்காக இன்னும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள்?" என்று மைதானத்திலேயே இங்கிலாந்து வீரர்கள் கேள்வி எழுப்ப, களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற பென் ஸ்டோக்ஸ், வேண்டுமென்றே எளிதான பந்துகளை வீசியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
சமீபத்தில் விஸ்டனுக்கு அளித்த பேட்டியில் இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய வாஷிங்டன் சுந்தர், "இது போன்ற சம்பவங்கள் எல்லா விளையாட்டுகளிலும் நடப்பது சகஜம்தான். கிரிக்கெட்டில் மட்டுமல்ல, எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் இது போன்ற தருணங்களைப் பார்க்க முடியும். அதுதான் விளையாட்டின் இயல்பு. அது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது," என்றார்.
அந்தப் பதற்றமான சூழல், தங்களை இன்னும் சிறப்பாக விளையாடத் தூண்டியதா என்ற கேள்விக்கு, "நூறு சதவீதம் உண்மை. எந்த ஒரு வீரரிடம் கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில், இது போன்ற சவால்களைத்தான் நாங்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கிறோம். கடினமான சூழல் வரும்போது, மனதளவில் உறுதியாக இருப்பது மட்டுமே அதிலிருந்து மீண்டு வர உதவும்," என்று கூறினார்.
பென் ஸ்டோக்ஸின் செயலால் கோபமடைந்த ஜடேஜா, ஹாரி ப்ரூக் பந்தில் சிக்ஸர் அடித்து தனது சதத்தை ஸ்டைலாக நிறைவு செய்தார். அவர் சதமடித்ததும், இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக், வாஷிங்டன் சுந்தரிடம் கை கொடுக்க வந்தார். ஆனால், சுந்தர் அதையும் கண்டுகொள்ளாமல் தனது பார்ட்னரான ஜடேஜாவை நோக்கிச் சென்றார். அடுத்த சில பந்துகளிலேயே, வாஷிங்டன் சுந்தரும் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
தனிப்பட்ட மைல்கற்களை எட்டுவதற்காக இந்திய வீரர்கள் கை கொடுக்க மறுத்தது சரிதான் என்றும், ஆட்டத்தின் முடிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிலையில், சதமடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்றும் பல முன்னாள் வீரர்கள் இந்திய வீரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.