10-க்கு 7 மதிப்பெண் தான் பெற்று இருக்கிறேன்.. ஆட்டநாயகன் விருது வென்ற தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி
கொல்கத்தா : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். 2021 ஆம் ஆண்டு வருண் சக்கரவர்த்தி இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். பிறகு அதே ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்தார்.
எனினும் இந்த தொடரின் எதிர்பார்த்த அளவு வருண் சக்ரவர்த்தி செயல்படவில்லை எனக்கூறி அவரை இந்திய அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது. இதனை அடுத்து கடும் பயிற்சிகளை மேற்கொண்ட வருண் சக்ரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி தான் இந்திய அணிக்கு திரும்பினார்.

இது வருண் சக்ரவர்த்தியின் இரண்டாவது இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. தமக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட வருண் சக்ரவர்த்தி, கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து விளையாடிய 8 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் கூட இங்கிலாந்து அணியில் லிவிங் ஸ்டோன், ஹரி புருக் மற்றும் பட்லர் ஆகியோரின் விக்கெட்டுகளை வருண் சக்ரவர்த்தி கைப்பற்றினார்.
இதனால் ஆட்டநாயகன் விருது வென்ற வருண் சக்ரவர்த்தி பேசுகையில், நான் இது போன்ற ஆடுகளத்தில் ஐபிஎல் தொடரில் பந்து வீசி நன்றாக பழகி விட்டேன். இந்த ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரியும். ஆனால் இப்படிப்பட்ட ஆடுகளங்களில் சில லெங்தில் நாம் பந்துவீசினால் அது நிச்சயம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் உதவிகரமாக அமையும் என்று எனக்கு தெரியும்.
நான் இங்கிலாந்து வீரர்கள் பெரிய ஷார்ட் ஆடுவதற்கு ஏதுவாக பந்து வீசக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஈடன் கார்டன் மைதானத்தில் பந்து வீசுவது என்பது மிகவும் சவாலான விஷயம். அதுவும் பட்லர் போன்ற வீரர்களுக்கு பந்து வீசுவது கடும் நெருக்கடியாக இருந்தது. நான் வீசிய கடைசி ஓவர் கொஞ்சம் கடினமாக எனக்கு இருந்தது.
இருப்பினும் கடவுளின் கருணையால் நான் வெற்றியை ருசித்தேன்.பேட்ஸ்மேன்களுக்கு சைடு ஸ்பின் மூலம் நெருக்கடி கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தேன். இதனால் ஆடுகளத்தில் கிடைத்த பவுன்சை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்தேன். என்னுடைய பந்துவீச்சுக்கு நான் பத்துக்கு ஏழு மதிப்பெண்கள் தான் கொடுப்பேன். இன்னும் நிறைய விஷயங்களை நான் செய்ய வேண்டும் என வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications