மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 30 சதங்களை கடந்து மீண்டும் உச்சத்திற்கு வந்துள்ள நிலையில், விராட் கோலி இன்னும் பரிதாப நிலையிலேயே உள்ளார்.
"Fab Four" சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 4 பேட்ஸ்மேன்களை குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் சொல். இதனை முதல்முறையாக நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்ட்டின் க்ரோ பயன்படுத்தினர். அதற்கு பின் தொன்று தொட்டு இந்த வார்த்தை ரசிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமகாலத்தில் Fab Four வீரர்கள் என்று விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கவனத்தை திருப்பிவிட்ட இந்த 4 பேட்ஸ்மேன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டையே பிரதானமாக விளையாடி வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் கடைசியாக ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில் வில்லியம்சன் மொத்தமாக 6 சதங்களை விளாசியது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் ஃபேப் 4 வீரர்களில் கேன் வில்லியம்சன் மீண்டும் உச்சத்திற்கு வந்துள்ளார். 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 31வது சதத்தை விளாசியுள்ளார். இதன் மூலம் 170 இன்னிங்ஸ்களுக்கு பின் அதிக சதம் விளாசிய வீரர்களின் பட்டியலில் சச்சின் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சாதனையை சமன் செய்துள்ளார். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்தை பொறுத்தவரை 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்களை விளாசியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 137 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 60 அரைசதங்களை விளாசியுள்ளார். இவர்கள் மூவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்களை எட்டி அசத்தியுள்ளார். ஆனால் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளில் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெறும் 2 சதங்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்களுடன் உள்ளார். ஃபேப் 4 பேட்ஸ்மேன்களில் விராட் கோலி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.