IND vs ENG: 3வது போட்டியிலிருந்து வாசிங்டன் சுந்தர் விலகல்.. ஸ்டார் ஸ்பின்னருக்கு இடம் கிடைக்குமா?
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார். கார்டிஃப் நகரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்தபோது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று செய்தி வெளியாகி உள்ளது.
வியாழக்கிழமையன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது சுந்தருக்கு தொடை தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் ஐந்து பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், அவருக்கு மைதானத்திலேயே மருத்துவ உதவி தேவைப்பட்டது. அதன் பின்னர் சாகிப் மஹ்மூத் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

முந்தைய ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இணைந்து ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று இந்திய அணி நம்பியிருந்தது. ஆனால் காயத்தால் அவதிப்பட்டதால் சுந்தரால் சரியாக நகர முடியாமல் போனது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சாகிப் மஹ்மூத் வீசிய ஷார்ட் பிட்ச் பந்து, சுந்தரின் கையில் பட்டு விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் தஞ்சமடைந்தது.
தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ள நிலையில், இந்தத் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாட குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டு சூழ்நிலைகளில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட முடியும் என்று பல வல்லுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 63 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். இதன் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற உதவியிருந்தார். அப்போது 259 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 26வது ஓவரில் கேப்டன் சுப்மன் கில் 80 ரன்களுடன் காயமடைந்து வெளியேறியதால் நெருக்கடிக்கு ஆளானது.
அதன்பின் வாஷிங்டன் சுந்தர், ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், 27வது ஓவரின் கடைசி பந்தில் ஹாரி புரூக்கின் சிறந்த நேரடி த்ரோ மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் ரன் அவுட் ஆனதால் அந்த பார்ட்னர்ஷிப் முறிந்தது. அடுத்த ஓவரிலேயே கேஎல்ராகுல், ஜோஷ் டங்கின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறியதால் இந்தியாவிற்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது.
இதனால் 160/4 என சுருங்கி நெருக்கடியில் இருந்த இந்திய அணியை, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் நிதானமான ஆட்டம் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு தரும் போது எல்லாம், அவருக்கு காயம் ஏற்படுவது தொடர்கதையாகி விட்டது.


Click it and Unblock the Notifications
" width="200" height="113">