சுந்தர் - கருண் நெகிழ்ச்சி செயல்.. இங்கிலாந்து வீரர் வலியில் துடிக்கும் போது ரன் ஓட மறுப்பு!
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய வீரர்களான கருண் நாயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் வெளிப்படுத்திய விளையாட்டு உணர்வு (Spirit of Cricket) கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் காயமடைந்த நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் நடந்து கொண்ட விதம் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் 59வது ஓவரில், ஜேமி ஓவர்டன் வீசிய பந்தை கருண் நாயர் நேராக அடித்தார். பந்து பவுண்டரியை நோக்கிச் சென்றபோது, இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ், அதைத் தடுக்கக் கடுமையாக டைவ் அடித்தார். பந்தை அவர் தடுத்துவிட்டாலும், டைவ் அடித்த வேகத்தில் அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

வலியால் துடித்த வோக்ஸ், மைதானத்திலேயே நீண்ட நேரம் சிகிச்சை பெற்ற பிறகு, தோள்பட்டையைத் தாங்கியபடி மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்தத் தொடரின் ஐந்து போட்டிகளிலும் விளையாடிய ஒரே இங்கிலாந்து பந்துவீச்சாளர் 36 வயதான வோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காயம் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மனங்களை வென்ற கருண் நாயர், வாஷிங்டன் சுந்தர்
இந்தச் சம்பவத்தின் போது, இந்திய பேட்ஸ்மேன்களான கருண் நாயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது. கிறிஸ் வோக்ஸ் பந்தை பிடிக்க சென்ற அதே சமயம் கருண் நாயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூன்று ரன்களை ஓடி இருந்தனர். வோக்ஸ் காயத்தால் பாதிக்கப்பட்டதை உணர்ந்த அவர்கள், தங்களுக்கு எளிதாகக் கிடைத்த நான்காவது ரன்னை ஓட மறுத்துவிட்டனர். ஒரு வீரரின் காயத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாத இந்திய ஜோடியின் இந்தச் செயல், உண்மையான விளையாட்டு உணர்வின் வெளிப்பாடாக அமைந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அரைசதம் அடித்த கருண் நாயர்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில், இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி, 153 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு, கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய கருண் நாயர், தனது டெஸ்ட் வாழ்க்கையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். இது அவரது டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது 50-க்கும் மேற்பட்ட ஸ்கோர் ஆகும்.
இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் அவர் முச்சதம் அடித்திருந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 52 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


Click it and Unblock the Notifications