ராஜ்கோட் : இளம் வீரர் சர்பராஸ் கான் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ள நிலையில், சிறு வயது முதல் சர்பராஸ் கான் கடந்து வந்த வலி நிறைந்த வாழ்க்கையை அவரின் தந்தை நெளஷத் கான் பகிர்ந்துள்ளார்.
ஒரேயொரு இன்னிங்ஸ் மூலமாக இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் சர்பராஸ் கான். இந்திய அணிக்காக களமிறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் விளாசி சாதனை படைத்த சர்பராஸ் கான், ஜடேஜாவின் தவறு காரணமாக சதத்தை மிஸ் செய்துள்ளார். அறிமுக வீரர் ஆட்டமிழந்ததற்காக கேப்டன் ரோகித் சர்மா தொப்பியை கழற்றி வீசி கோபத்தை வெளிப்படுத்தியது இதுவே முதல்முறையாக இருக்கும்.

அந்த அளவிற்கு சர்பராஸ் கானின் ஆட்டம் அனைவரையும் ஈர்த்தது. பேட்டிங் செய்வதற்காக 4 மணி நேரத்திற்கும் மேலாக காலில் பேட் அணிந்து காத்திருப்பதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையில் கூற, அவர் இந்திய அணியில் இடம்பிடிக்க 3 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தார். அந்த வலிக்கு முன் இது சாதாரணம் என்று தினேஷ் கார்த்திக் வாதத்தில் ஈடுபட்டது பலரையும் ஈர்த்தது.
உள்ளூர் கிரிக்கெட்டில் வேறு லெவல் சாதனைகளை படைத்துள்ள சர்பராஸ் கானுக்கு அவரின் பயிற்சியாளர், தந்தை இருவரும் ஒருவர் தான். மும்பை மைதானங்களில் கிரிக்கெட் விளையாடும் அத்தனை பேருக்கும் நெளஷத் கான் யார் என்பது தெரியும். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது கனவை, தனது மகன்கள் மட்டுமல்லாமல் பல இளைஞர்களிடமும் விதைத்தவர் நெளஷத் கான்.
இந்த நிலையில் சர்பராஸ் கான் சிறுவயதில் பட்ட கஷ்டங்களை நெளஷத் கான் கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு பிரபல பத்திரிகைக்கு நெளஷத் கான் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் சேரியில் இருந்து வந்தவர்கள். பாத் ரூம் செல்ல வேண்டுமென்றால் கூட, லைனில் நின்று தான் செல்ல வேண்டிய சூழல்நிலை. அப்போதெல்லாம் பலரும் எளிதாக சர்பராஸ் கானை பளாரென அடித்து, அவரை ஏமாற்றி முந்தி செல்வார்கள்.
நாங்கள் வரும் போதும் எதையும் கொண்டு வரவில்லை. ஒருவேளை தோற்றாலும் கவலைப்பட்டதில்லை. அப்படியான ஒரு நாளில் சர்பராஸ் கான் என்னிடம் வந்து, அப்பா.. ஒருவேளை என்னால் இந்திய அணிக்காக விளையாட முடியவில்லை என்றால்.. நாம் எந்த நேரத்திலும் ரயிலில் துணிகளை விற்று பிழைத்து கொள்வோம் என்று கூறினார்.
கிரிக்கெட் அனைவருக்குமானது என்று வாசகம் இடம்பெற்ற ஜெர்சியை அணிந்து நெளஷத் கான் புதிய கருத்தையே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார். தற்போது சர்பராஸ் கான் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளதோடு, அண்மையில் முடிந்த டி20 உலகக்கோப்பையில் சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கான் இந்திய அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.