விசாகப்பட்டினம் : இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக 4வது நாள் ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்ய களமிறங்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2வது இன்னிங்ஸில் சுப்மன் கில்லின் அபார சதம் காரணமாக 255 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றிபெற 399 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

11 இன்னிங்ஸ்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில், சரியான நேரத்தில் ஃபார்மை மீட்டெடுத்து சதம் விளாசி மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார். இதன் காரணமாக சுப்மன் கில்லின் இடத்திற்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே 4வது நாள் ஆட்டத்தில் சுப்மன் கில் இந்திய அணிக்காக ஃபீல்டிங் செய்ய களமிறங்கவில்லை.
இவருக்கு பதிலாக இளம் வீரர் சர்ஃபராஸ் கான் களத்தில் ஃபீல்டிங் செய்தார். ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் செய்த சர்ஃபராஸ் கான் முதல்முறையாக இந்திய அணிக்காக ஃபீல்டிங்கில் ஈடுபட்டார். இதையடுத்து அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. இருப்பினும் சிறந்த ஃபீல்டரான சுப்மன் கில் ஃபீல்டிங் செய்ய களமிறங்காதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் சுப்மன் கில் நிலை குறித்து பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சுப்மன் கில்லின் ஆள் காட்டி விரலில் 2ம் நாள் ஃபீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 4ம் நாள் ஃபீல்டிங்கில் சுப்மன் கில் ஈடுபட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஏற்கனவே கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், விராட் கோலியும் 3வது டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ஃபார்முக்கு திரும்பியுள்ள சுப்மன் கில்லும் காயமடைந்து இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.