மும்பை: ஆந்திர பிரதேசம் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவதற்கு பின் உள்ள காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கி 500 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தார் ஸ்ரேயாஸ் ஐயர். நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதால், மீண்டும் டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

துணை கேப்டனான அஜிங்கியா ரஹானே நீக்கப்பட்டு அவரது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் ரஹானே நல்ல ரெக்கார்ட் வைத்திருந்தும் ரஹானே கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 4 இன்னிங்ஸ்களில் சேர்த்து 41 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
பவுன்ஸ், ஸ்விங் உள்ளிட்ட பந்துகளை எதிர்கொள்ள ஸ்ரேயாஸ் ஐயரிடம் எந்த டெக்னிக்கும் இல்லை. இதனால் ஆசிய ஆடுகளங்களுக்கு வெளியில் ஸ்ரேயாஸ் ஐயரால் தாக்கு பிடிக்க முடியாது என்று ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்தன. அந்த அளவிற்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் ஸ்பின்னர்கள் இல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயரால் ரன்கள் சேர்க்க முடியாது என்றும் பார்க்கப்பட்டது.
இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கிவிட்டு, ரிங்கு சிங்கை அவரது இடத்தில் விளையாட வைக்கலாம் என்று ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டது. மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனும் இருந்தால், இந்திய அணி கூடுதல் பலத்துடன் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது திறமையை நிரூபிக்க புதிய யுக்தியை செயல்படுத்தவுள்ளார். அதாவது ஜனவரி 12ஆம் தேதி ரஞ்சி டிராபி தொடரில் மும்பை - ஆந்திரா அணிகள் மோதுகின்றன. சொந்த மண்ணான மும்பை மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் ஃபார்மை நிரூபிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிக்க முடியும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் திட்டமிட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்தியா வரும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 2 பயிற்சி போட்டிகளில் இந்திய ஏ அணி விளையாடவுள்ளன. அதில் விளையாடி டெஸ்ட் தொடருக்கு பயிற்சி மேற்கொள்ளாமல், ரஞ்சி டிராபியில் விளையாடவுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய ஏ அணிக்காக விளையாட விருப்பமில்லை என்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தரப்பில் கூறியுள்ளதாகவும் தகவல் வெளி வந்துள்ளன.