IND vs ENG : 6,4,4,6,6.. 5 ஓவர்களில் 48 ரன்கள்.. இங்கிலாந்து பவுலர்களை புலம்ப வைத்த ஜெய்ஸ்-பால்!
ராஜ்கோட் : இங்கிலாந்து அணியின் சீனியர் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஒரே ஓவரில் 19 ரன்களை விளாசி ஜெய்ஸ்வால் அனைவரையும் அசர வைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் விளாசினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அபார சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 319 ரன்களை சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலமாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை 126 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. பின்னர் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் இருவரும் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடினர்.
இதன் காரணமாக இந்திய அணியின் முன்னிலை 200 ரன்களை கடந்தது. இதன்பின் 27வது ஓவரை வீச ஆண்டர்சன் அட்டாக்கில் கொண்டு வரபட்டார். அந்த ஓவரின் முதல் பந்தில் கில் லெக்-பை மூலமாக பவுண்டரி அடிக்க, பின்னர் ஜெய்ஸ்வால் அதிரடிக்கு திரும்பினார். அந்த ஓவரின் 4வது பந்தில் சிக்சர் அடித்த அவர், அடுத்த 2 பந்திலும் பவுண்டரியை விளாசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது.
தொடர்ந்து டாம் ஹார்ட்லி வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி, 80 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து சுப்மன் கில்லும் தன் பங்கிற்கு பவுண்டரியை விளாச, ஜெய்ஸ்வால் அதிரடியை நிறுத்தும் மனநிலையில் இல்லை. ஆண்டர்சன், ஹார்ட்லியை தொடர்ந்து அட்டாக்கில் கொண்டு வரப்பட்ட ரெஹான் அஹ்மத் பந்திலும் சிக்சரை விளாசினார். இதன் மூலமாக 5 ஓவர்களில் 48 ரன்களை விளாசி, பேஸ் பால் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு ஜெய்ஸ்-பாலை காண்பித்தார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications