IND vs ENG:சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்..டிராவிட்டின் மகத்தான சாதனை மிஸ்!ரோகித் ரெக்கார்ட் முறியடிப்பு
பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ரன்களில் அந்த வாய்ப்பை அவர் இழந்தார்.
பிர்மிங்காமில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் கருண் நாயர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதில் கருண் நாயர் 31 ரன்களில் வெளியேறினார். இந்த சூழலில் தொடர்ந்து அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து நியூசிலாந்து ஆஸ்திரேலியா நாடுகளில் அதிக அரை சதம் அடித்த இந்திய தொடக்க வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை ஜெய்ஸ்வால் பின்னுக்கு தள்ளினார்.ரோகித் சர்மா நான்கு முறை 50 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் ஜெய்ஸ்வால் ஐந்து முறை அரை சதத்துக்கு மேல் அடித்துள்ளார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 107 பந்துகளை எதிர்கொண்டு 87 ரன்களில் அவர் ஆட்டம் இழந்தார். மொத்தம் இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். ஜெய்ஸ்வால் கூடுதலாக ஒரு பத்து ரன்கள் அடித்திருந்தால் அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.
ஜெய்ஸ்வால் 39 இன்னிங்ஸில் தற்போது 1990 ரன்கள் அடித்திருக்கின்றார்.
இதற்கு முன்பு டிராவிட் 40 இன்னிங்ஸில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்தது சாதனையாக இருந்தது. இதேபோன்று 23 வயதில் 80 அல்லது 90களில் ஜெய்ஸ்வால் இதுவரை நான்கு முறை ஆட்டம் இழந்திருக்கிறார். அதிகபட்சமாக சச்சின் ஆறுமுறையும், கபில்தேவ், ரிஷப் பன்ட், ஜெய்ஸ்வால் ஆகியோர் 4 முறையும், இர்பான் பதான் மூன்று முறையும் 23 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 80 அல்லது 90 ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஜெய்ஸ்வால் கடைசியாக 16 மாதங்களில் இதுவரை 80 ரன்களை கடந்து சதம் அடிக்காமல் நான்கு முறை ஆட்டம் இழந்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications