IND vs IRE: வெட்கக்கேடான சாதனை படைத்த சாம்சன், அபிஷேக்.. ஜோடியாக போட்ட கோழி முட்டை
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை மிக விரைவாக இழந்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தேவையற்ற சில மோசமான சாதனைகளைப் படைத்துள்ளனர்.
பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

2026 ஆம் ஆண்டில் அனைத்து வகையான டி20 போட்டிகளையும் சேர்த்து அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆவது இது 9-வது முறையாகும். இதன் மூலம், ஒரு கேலண்டர் ஆண்டில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர் என்ற தேவையற்ற சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
சஞ்சு சாம்சன் அதிர்ச்சி சாதனை
அபிஷேக் சர்மாவைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனும் ஒரு வெட்கக்கேடான சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே இரண்டு முறை ஆட்டமிழந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக கே.எல். ராகுல், பிரித்வி ஷா, ரோஹித் சர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தங்களது சர்வதேச டி20 இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளனர். ஆனால், இவர்கள் யாரும் இரண்டு முறை இவ்வாறு ஆட்டமிழந்ததில்லை. சஞ்சு சாம்சன் மட்டுமே தற்போது இரண்டாவது முறையாக இந்தத் தவறைச் செய்து அதிர்ச்சி தந்துள்ளார்.
இப்போட்டியில் அயர்லாந்து அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெய் முன்ட்ரா வீசிய பந்து, சஞ்சு சாம்சனின் பேடில் நேராகத் தாக்கியது. நடுவர் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் அவுட் என்று தீர்ப்பளித்ததும், சஞ்சு சாம்சன் உடனடியாக டிஆர்எஸ் (DRS) முறையில் மேல்முறையீடு செய்தார். ஆனால், ரீப்ளேயில் பந்து ஸ்டம்பைத் தாக்குவது தெளிவாகத் தெரிந்ததால், நடுவரின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு அவர் விரக்தியுடன் வெளியேறினார்.


Click it and Unblock the Notifications
