IND vs IRE: இந்தியாவின் தோல்வியிலும் பிரின்ஸ் யாதவ் செய்த சாதனை.. கடைசி பந்தில் செய்த சம்பவம்
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தபோதிலும், அறிமுக வீரரான பிரின்ஸ் யாதவ் தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய அயர்லாந்து அணி, ஹாரி டெக்டரின் 53 ரன்கள் மற்றும் பெஞ்சமின் காலிட்ஸின் 37 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய டெல்லியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ், தனது 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பிரின்ஸ் யாதவ்.
அடுத்து 155 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, ஆரம்பத்திலேயே சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை முதல் ஓவரிலேயே இழந்து தடுமாறியது. ராஜஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெய் முந்த்ரா இந்த விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, அக்சர் படேல் மற்றும் அறிமுக வீரர் சூரியன்ஷ் ஷெட்கே ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் 20வது ஓவரில் 11-வது வீரராக பிரின்ஸ் யாதவ் களம் இறங்கினார். போட்டியின் கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது, ஹாரி டெக்டர் வீசிய பந்தை பிரின்ஸ் யாதவ் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதனால் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும், சர்வதேச டி20 போட்டியில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைச் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
