அயர்லாந்து ஒன்றும் பிக்னிக் ஸ்பாட் இல்லை! - இந்திய அணியின் சொதப்பல்களை வெளுத்து வாங்கிய சடகோபன் ரமேஷ்
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணியிடம் இந்திய அணி அடைந்த அதிர்ச்சித் தோல்வியை முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சதாகோபன் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார். இதற்கு முன் அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய எட்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இருப்பினும், தற்போதைய ஆட்டத்தில் இரண்டு முறை உலக சாம்பியனான இந்திய அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டது.
அயர்லாந்து அணி தனது 20 ஓவர்களில் 182/9 ரன்கள் எடுத்தது, பின்னர் வலுவான இந்திய பேட்டிங் வரிசையை 148 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது.இந்திய அணியின் இந்த அதிர்ச்சித் தோல்வி குறித்து பேசிய ரமேஷ் "மைதானத்தின் பெரிய எல்லையைப் பயன்படுத்தி, குட்டையான பந்துகள் (short delivery) மூலம் இந்திய பேட்டர்களை சோதித்த அயர்லாந்து அணியின் முயற்சி பாராட்டுக்குரியது.

இந்திய அணி இந்த போட்டியை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டது தெளிவாகத் தெரிகிறது. அயர்லாந்து தொடரை ஒரு பிக்னிக் டூர் போல அவர்கள் நினைத்துக்கொண்டனர், எளிதாக வென்றுவிடலாம் என்றும், இங்கிலாந்து தொடரை மட்டும்தான் தீவிரமாக விளையாட வேண்டும் என்றும் கருதினர். ஆனால், அயர்லாந்து அணி இது ஒன்றும் பிக்னிக் ஸ்பாட் அல்ல என்று கூறி இந்தியாவிற்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளது."
"அயர்லாந்து தொடர் முதலில் திட்டமிடப்பட்ட ஒன்றே கிடையாது. இது இங்கிலாந்து என்ற முதன்மை உணவுக்குத் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போன்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அயர்லாந்து என்ற அந்த ஊறுகாயின் காரத்தைக் கூட இந்தியாவால் தாங்க முடியவில்லை. இதற்கு என்ன சமாதானம் சொன்னாலும், இது இந்திய அணிக்கு ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் மோசமான தோல்வியாகும். அதிகப்படியான தன்னம்பிக்கை எப்போதும் உடலுக்கு நல்லதல்ல, அதன் காரணமாகவே நேற்று இந்தியாவின் கதை முடிந்தது. இந்தியா நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், ஆனால் அதிகப்படியான தன்னம்பிக்கையுடன் இருக்கக்கூடாது."
அயர்லாந்துக்கு எதிரான இந்தத் தொடர், புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் கீழ் இந்திய அணி விளையாடும் முதல் தொடராகும். இந்தத் தோல்வியின் மூலம், ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை அதே மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அயர்லாந்திடம் தோற்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது
கடந்த சில மாதங்களாக இந்திய வீரர்கள் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடி வருவதைக் குறிப்பிட்டு, அயர்லாந்துக்கு எதிரான இந்தத் தோல்வி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்று சதாகோபன் ரமேஷ் நம்புகிறார். சொந்த மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்ற பிறகு, அயர்லாந்து தொடருக்கு முன்னதாக கிட்டத்தட்ட அனைத்து இந்திய வீரர்களும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக 2026 ஐபிஎல் சீசனில் விளையாடினர்.
"யானைக்கும் அடி சறுக்கும் என்பது உண்மைதான். ஆனால் அயர்லாந்துக்கு எதிராக எப்படி சறுக்க முடியும்? குறிப்பாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய ஒரு அணிக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாகும். உலகக் கோப்பையில் ஒரு மாதம் டி20 கிரிக்கெட் விளையாடிய பிறகு, அனைத்து இந்திய வீரர்களும் ஐபிஎல் தொடரில் மேலும் 3 மாதங்கள் விளையாடினர். இவ்வாறு தொடர்ந்து 4 மாதங்கள் டி20 கிரிக்கெட் விளையாடிய பிறகும் அயர்லாந்திடம் தோற்பது என்பது விளக்க முடியாத ஒன்று" என்று ரமேஷ் கூறியுள்ளார்.
இந்தியாவின் தொடர்ச்சியான ஃபீல்டிங் மற்றும் கேட்ச் தவறுகளையும் ரமேஷ் விமர்சித்தார். "இந்தியா மிகவும் மோசமான கிரிக்கெட்டை விளையாடியது. டி20 உலகக் கோப்பையில் தொடங்கி, ஐபிஎல் மூலமாக நேற்று வரை அவர்கள் கேட்ச்களை தவறவிட்டு வருகின்றனர். குறிப்பாக உயரமான கேட்ச்களை எப்போதும் தவறவிடுகிறார்கள்.
ஐபிஎல் தொடரில், இம்பாக்ட் பிளேயர் (Impact Player) விதிமுறை இருப்பதால், நீங்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சு மட்டும் செய்துவிட்டு உங்களது மோசமான ஃபீல்டிங்கை மறைத்துக் கொள்ள முடியும். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில், பிளேயிங் 11-ல் இடம் பெற வேண்டுமென்றால் நீங்கள் ஒரு சிறந்த ஃபீல்டராக இருக்க வேண்டும். பல வீரர்கள் ஐபிஎல்-ல் வெறும் பேட்டிங் மட்டும் செய்து இம்பாக்ட் பிளேயர் விதியால் தப்பித்துக்கொண்டனர்."
இந்திய அணி கடந்த மூன்று ஆண்டுகளில் இருதரப்பு டி20 தொடரை இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் கடைசி தொடர் தோல்வி 2023 இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications

