IND vs IRE: கேப்டனாக முதல் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் படுமோசமான சாதனை.. கோலி, கில் வரிசையில் இடம்
பெல்பாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுத் தோல்வியைத் தழுவியுள்ளது. பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த தோல்வி பெரும் ஏமாற்றமாக முடிந்துள்ளது.
இதன் மூலம், தனது முதல் டி20 கேப்டன்சி போட்டியிலேயே தோல்வியடைந்த இந்திய கேப்டன்களின் மோசமான பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயரும் தற்போது இணைந்துள்ளார். முன்னதாக, 63 டி20 போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர், 31 வயது 202 நாட்களில் கேப்டனாக அறிமுகமாகிப் புதிய சாதனை படைத்தார்.

மேலும் ஐபிஎல் உள்ளிட்ட டி20 போட்டிகளில் 114 முறை கேப்டனாகச் செயல்பட்ட அனுபவத்துடன் இந்திய அணியை வழிநடத்த வந்த ஐயரின் வியூகங்கள் அனைத்தும் அயர்லாந்திடம் தவிடுபொடியாயின. கேப்டனாக தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 கேப்டன்களில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார். முன்னதாக விராட் கோலி (2017), ரிஷப் பண்ட் (2022) மற்றும் சுப்மன் கில் (2024) ஆகியோர் தங்களின் முதல் டி20 கேப்டன்சி போட்டியில் தோல்வி அடைந்து இருந்தனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது, கேப்டன் லார்கன் டக்கரின் 50 ரன்கள் மற்றும் கரேத் டெலானியின் 49 ரன்கள் உதவியோடு 182 ரன்கள் குவித்தது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
அயர்லாந்தின் அறிமுக வீரர்கள் ஜெய் முன்ட்ரா (2/25) மற்றும் மேட் ஹாலர்ட் (3/28) ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா மட்டுமே 50 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் இந்தப் போட்டியில் 7 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதனால் அவரது பேட்டிங்கும் விமர்சனத்துக்கு உள்ளானது.
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் சில வியூகங்கள் இப்போட்டியில் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளன. நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் இடம் தரவில்லை. மேலும், பிரசித் கிருஷ்ணாவை அணியில் தேர்வு செய்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.


Click it and Unblock the Notifications
