IND vs IRE: 6 பந்தில் 2 விக்கெட்.. பும்ராவை மிஞ்சிய இந்திய பவுலர்.. ஒரே ஓவரில் அரண்டு போன அயர்லாந்து
நியூயார்க் : அயர்லாந்து அணிக்கு எதிரான 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தி போட்டியை இந்திய அணியின் வசம் கொண்டு வந்தார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் "ஏ" வில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவர் வீசினார்.

அந்த ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்து முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் நான்கு ரன்கள் எடுத்தது அயர்லாந்து அணி. அதன் பின் அந்த அணி தொடர்ந்து ரன் குவிக்க திட்டமிட்டது. ஆனால், மூன்றாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் அயர்லாந்து அணியை நிலை குலைய வைத்தார்.
மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே பால் ஸ்டிர்லிங் 2 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் மற்றொரு துவக்க வீரரான பால்பிர்னி ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் பவுல்ட் அவுட் ஆனார். 6 பந்துகள் இடைவெளியில் 2 விக்கெட்களை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். இதை அடுத்து அயர்லாந்து அணி 3 ஓவர்களில் 9 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.
இந்திய அணிக்கு எப்போதும் பும்ரா தான் முதல் ஓவரை வீசுவார். ஆனால், இந்த முறை அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசியதோடு மட்டுமல்லாமல் இரண்டு விக்கெட்களை ஒரே ஓவரில் வீழ்த்தி எதிரணியை அச்சுறுத்தி இருக்கிறார். அதன் பின் அயர்லாந்து அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. 49 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.
பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர். முகமது சிராஜ் மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அயர்லாந்து அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் இந்திய அணி சேஸிங் செய்தது. ரோஹித் சர்மா 52, ரிஷப் பண்ட் 36 ரன்கள் குவித்து 12.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டச் செய்தனர். இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications