IND vs IRE: இந்த தோல்வி பெரிய அவமானம்.. இது கூட செய்ய தெரியாதா? ஏத்துக்கவே முடியல..ஸ்ரீகாந்த் சாடல்
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய அணி, அயர்லாந்தை எளிதாக வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பிய இந்தியா, அயர்லாந்துக்கு எதிராக தனது முதல் தோல்வியைப் பதிவு செய்தது. புதிய டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி விளையாடிய முதல் போட்டி இதுவாகும். இந்த மோசமான தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது 'சீக்கி சீக்கா' யூடியூப் சேனலில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த் "இது இந்திய அணிக்கு மிகவும் அவமானகரமான தோல்வி. பும்ரா மற்றும் பாண்டியா இல்லாததைத் தவிர்த்து, மற்றபடி ஒரு முழுமையான வலுவான அணியைக் கொண்டு அயர்லாந்திடம் எப்படி தோற்க முடியும்? அயர்லாந்தின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை முடித்தது வியப்பாக இருக்கிறது. இந்தப் போட்டியில் தாங்கள் தான் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற மிதப்பில் இந்திய அணி விளையாடியது போல் இருந்தது. அவர்களது அணுகுமுறை அப்படி இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான பெரிய தொடருக்கு முன்னதாக, இந்திய அணிக்கு கிடைத்துள்ள ஒரு எச்சரிக்கை மணி இது" என்று தெரிவித்துள்ளார்.
"இந்தியாவின் பேட்டிங்கில் அதீத தன்னம்பிக்கை தெரிந்தது" - ஸ்ரீகாந்த்
இப்போட்டியில் 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் வெறும் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்திய பேட்டர்களின் மோசமான ஆட்டம் குறித்து பேசிய ஸ்ரீகாந்த், "இந்திய அணியின் பேட்டிங்கில் அதீத தன்னம்பிக்கை தெரிந்தது. களமிறங்கிய பேட்டர்கள் அனைவரும் பேட்டை வீசி அடித்துவிட்டு ஆட்டமிழந்தனர். 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்வதில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சிக்கல் உள்ளது. இந்திய அணி விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அபிஷேக் சர்மா வழக்கம் போல் சிறப்பாக விளையாடினார், ஆனால் மற்ற வீரர்கள் அனைவரும் அயர்லாந்து வீரர்களுக்கு கேட்ச் பயிற்சி அளிப்பது போல் விளையாடி அவுட் ஆகினர்" என்றார்.
"திலக் வர்மா தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று விக்கெட்டை இழந்தார். இந்திய பேட்டர்களுக்கு தொடர்ந்து சில டாட் பந்துகளை வீசினால், அவர்கள் பதற்றமடைந்து விக்கெட்டுகளை வாரி வழங்கி விடுவது தெளிவாகத் தெரிகிறது. டாட் பந்துகள் அதிகமாகும் போது, இந்திய வீரர்கள் தப்பிக்க வழியின்றி அடித்து ஆட முயன்று விக்கெட்டை இழக்கிறார்கள். இயல்பாக விளையாடிய அபிஷேக் சர்மாவைத் தவிர, மற்ற அனைத்து பேட்டர்களும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்" என்று சுட்டிக்காட்டினார்.
இப்போட்டியில் அபிஷேக் சர்மா மட்டுமே 21 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஓரளவு தாக்குப்பிடித்தார். மற்ற டாப் 6 பேட்டர்களில் ஒருவரால் கூட 20 ரன்களைக் கடக்க முடியவில்லை. அவர்களின் ஸ்டிரைக் ரேட்டும் 130-க்கும் குறைவாகவே இருந்தது. இந்த அதிர்ச்சித் தோல்வியின் மூலம், ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை அன்று அதே மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.


Click it and Unblock the Notifications

