IND vs JPN: இந்தியா மானத்தை காப்பாற்றிய அக்சர்.. வெறும் 2 ரன் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது
சானோ: இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட இப்போட்டி, தலா 5 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்ச ரன்களை எடுத்தார். ஜப்பான் அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் காரணமாக இந்திய அணியால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.

33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜப்பான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே லச்லன் யமமோட்டோ-லேக், இஷான் கிஷனின் துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய இப்ராஹிம் தகாஷி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஜப்பான் அணியின் கேப்டன் கெண்டல் கடோவகி-பிளெமிங் அதிரடியாக விளையாடி 12 ரன்கள் எடுத்தார். ஆனால், நான்காவது ஓவரின் இறுதிப் பந்தில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவரும் ஆட்டமிழக்க, போட்டி இந்தியாவின் கைக்கு மாறியது.
இறுதி ஓவரில் ஜப்பான் அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. அக்ஷர் படேல் வீசிய இந்த இறுதி ஓவரில் பெரும் பரபரப்பு நிலவியது. வைடு பந்துகள் மற்றும் அம்பயருடன் ஏற்பட்ட சிறிய விவாதங்களுக்கு மத்தியில், அக்ஷர் படேல் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.
இறுதி ஓவரில் ஜப்பான் அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஜப்பான் அணி 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் இந்தியாவின் மானத்தை பவுலர்கள் காப்பாற்றினர்.


Click it and Unblock the Notifications


