டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதிய ஆட்டத்தில், நமீபியா கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வாக்குவாதத்திற்குப் பிறகு ஆக்ரோஷமாகப் பந்துவீசிய அவர், இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மிரள வைத்தார்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி இருந்தாலும் நமீபியா கேப்டனின் பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நமீபியா அணி பந்துவீசிக் கொண்டிருந்தபோது, எட்டாவது ஓவரை கேப்டன் எராஸ்மஸ் வீசினார். அப்போது ஒரு பந்தை அவர் கிரீஸுக்கு வருவதற்கு வெகு முன்னதாகவே விடுவித்தார். எராஸ்மஸின் வித்தியாசமான பந்துவீச்சு முறையைக் கவனித்த கள நடுவர் ராட் டக்கர், அந்தப் பந்தை செல்லாத பந்து (dead ball) என்று அறிவித்தார்.
இதனால் அதிருப்தியடைந்த எராஸ்மஸ், நடுவரிடம் சென்று ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் வீசியது சரியான முறைதான் என்று அவர் வாதிட்டார். நடுவர் டக்கர் அவருக்கு விதிமுறைகளை விளக்கிய பிறகே அவர் சமாதானமடைந்தார். இந்தச் சம்பவம் சிறிது நேரம் மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
நடுவருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு எராஸ்மஸ் வெறித்தனமாகப் பந்துவீசினார். தனது சுழற்பந்து வீச்சில் வித்தியாசமான முறைகளைக் கையாண்ட அவர், இந்திய வீரர்களைத் திணறடித்தார். குறிப்பாகப் பந்துவீசும் கிரீஸ்-க்கு சில அடிகள் பின்னால் இருந்து பந்துவீசி பேட்ஸ்மேன்களைக் குழப்பினார்.
4 ஓவர்கள் வீசிய அவர், வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா, சிவம் துபே போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை இவரே வீழ்த்தினார். இவரது இந்தச் செயல்பாடு, அடுத்து வரவுள்ள பாகிஸ்தான் போட்டிக்கு இந்திய வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது. ஏனெனில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் இதேபோன்று வித்தியாசமாகப் பந்துவீசக்கூடியவர்.
முன்னதாகப் பேட்டிங் செய்த இந்திய அணியில் இஷான் கிஷன் ருத்ரதாண்டவம் ஆடினார். நமீபியா பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், 24 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 52 ரன்கள் விளாச, இந்தியா 20 ஓவர் முடிவில் 209 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய நமீபியா 116 ரன்களில் சுருண்டது. எராஸ்மஸ் பந்துவீச்சில் மிரட்டினாலும், நமீபியா அணியின் பேட்டிங் மோசமாக இருந்ததால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.