Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NAM: "ராணுவ பயிற்சி மாதிரி.." 2 மாதமா இதான் செஞ்சேன்.. ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்

டெல்லி: டி20 உலகக்கோப்பைத் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்டியா, தனது சிறப்பான ஆட்டத்திற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 209 ரன்களைக் குவித்தது. பின்னர் விளையாடிய நமீபியா அணி 116 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்டியா அதிரடி

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. பேட்டிங்கில் களமிறங்கிய அவர், 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் விளாசினார். அதேபோல பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி வெறும் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தச் சிறப்பான செயல்பாட்டிற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

IND vs NAM Hardik Pandya Reveals Army-Style Training After Man of the Match Performance Against Namibia

ராணுவப் பயிற்சி

விருது பெற்ற பின் பேசிய ஹர்திக் பாண்டியா, "நான் கிரிக்கெட்டை மிகவும் ரசித்து விளையாடுகிறேன். கடந்த சில மாதங்களாகவே என்னுடைய உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனை மீட்டெடுக்கக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். அது ஒரு ராணுவ முகாம் போன்ற பயிற்சியாக இருந்தது. காலை மற்றும் மாலை வேளைகளில் தொடர்ந்து கடுமையான பயிற்சிகளைச் செய்தேன். நாட்டிற்காக விளையாடுவதுதான் எனக்கு எப்போதுமே முன்னுரிமை. அதற்காகக் கூடுதல் உழைப்பைக் கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சியே" என்று கூறினார்.

பேட்டிங் தான் பிடிக்கும்

தனது பேட்டிங் குறித்துப் பேசிய அவர், "ஒரு ஆல்ரவுண்டராக இருப்பதில் நான் எப்போதும் பெருமை கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் எனது திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். இருப்பினும், பந்துவீச்சை விட பேட்டிங் செய்வதுதான் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. பந்துவீச்சில் விக்கெட் எடுப்பது மகிழ்ச்சிதான் என்றாலும், பேட்டிங்கில் ரன் குவிப்பது கேக்கில் சர்க்கரைத் தூவுவது போன்றது" என்று சுவாரஸ்யமாகத் தெரிவித்தார்.

பந்துவீச்சாளர்கள் அபாரம்

இந்திய அணியின் பந்துவீச்சு குறித்துப் பேசிய ஹர்திக், "எங்கள் அணியின் மிகப்பெரிய பலமே பந்துவீச்சில் இருக்கும் பன்முகத்தன்மைதான். வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப யார் வேண்டுமானாலும் ஆட்டத்தை மாற்றலாம். வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் எனச் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அதேபோல வேகப்பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியைச் சரியாகச் செய்கிறார்கள்" என்று பாராட்டினார்.

நமீபியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பிட்ச் எப்படி இருந்தது?

டெல்லி மைதானம் குறித்துப் பேசிய அவர், "தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் இங்கு நடைபெறுவதால், ஆடுகளம் பேட்டிங்கிற்கு முழுமையாகச் சாதகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் பேட்டிங் செய்யும்போது பந்து சற்று நின்று வந்தது. சில பந்துகள் தாழ்வாகவும் சென்றன. இதுபோன்ற பெரிய தொடர்களில் ஆடுகளத்தின் தன்மை எப்படி இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல நம்மை மாற்றிக்கொண்டு விளையாடுவதில்தான் திறமை இருக்கிறது. இருப்பினும், பேட்டிங்கிற்குச் சாதகமான தட்டையான ஆடுகளங்களில் விளையாடுவதையே நாங்கள் விரும்புகிறோம்" என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

Story first published: Thursday, February 12, 2026, 23:31 [IST]
Other articles published on Feb 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+