IND vs NAM: மெகா சாதனை.. தோனியின் 19 ஆண்டு ரெக்கார்டை உடைத்து.. வரலாற்றை மாற்றிய இஷான் கிஷன்
டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு விக்கெட் கீப்பரும் டி20 உலகக்கோப்பையில் செய்யாத சாதனையை அவர் நிகழ்த்திக்காட்டியுள்ளார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நமீபியாவுக்கு எதிராகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய இஷான் கிஷன் ருத்ரதாண்டவம் ஆடினார்.
புதிய வரலாறு
மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த இஷான் கிஷன், வெறும் 24 பந்துகளில் 61 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும் 5 பிரம்மாண்ட சிக்ஸர்களும் அடங்கும். வெறும் 20 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த இஷான் கிஷன், இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அரைசதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

தோனியின் சாதனை முறியடிப்பு
இதற்கு முன்பு டி20 உலகக்கோப்பையில் ஒரு இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர் தோனியின் பெயரில் இருந்தது. 2007ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோனி 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதன்பிறகு வந்த ரிஷப் பண்ட் 2024 உலகக்கோப்பையில் 42 ரன்கள் வரை எடுத்திருந்தாலும், அவரால் அரைசதம் அடிக்க முடியவில்லை.
சுமார் 19 ஆண்டுகளாகத் தகர்க்க முடியாத தோனியின் இந்தச் சாதனையை, இடதுகை ஆட்டக்காரரான இஷான் கிஷன் தற்போது முறியடித்துள்ளார்.
இந்திய விக்கெட் கீப்பர்களின் அதிகபட்ச ஸ்கோர் (டி20 உலகக்கோப்பை):
இஷான் கிஷன் - 61 ரன்கள் (எதிர்: நமீபியா, 2026)
எம்.எஸ்.தோனி - 45 ரன்கள் (எதிர்: தென்னாப்பிரிக்கா, 2007)
ரிஷப் பண்ட் - 42 ரன்கள் (எதிர்: பாகிஸ்தான், 2024)
அசுர வேகத்தில் 100 ரன்கள்
இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஜோடி நமீபியா பந்துவீச்சாளர்களைக் கதிகலங்க வைத்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு வெறும் 31 பந்துகளில் 79 ரன்களைக் குவித்தது. இவர்களின் அதிரடியால் இந்திய அணி 6.5 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு அணி மிக வேகமாக 100 ரன்களைக் கடந்த சாதனையாகவும் இது அமைந்தது.
உலக அளவில் டி20 உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக அதிகபட்ச ரன் குவித்த சாதனை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் வசம் உள்ளது. அவர் 2012ல் வங்கதேசத்திற்கு எதிராக 123 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை இஷான் கிஷன் முந்த வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் சிலாகித்து அவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications