IND vs NED: தொடர்ந்து 2 போட்டிகளில் டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா.. கவலைப்பட தேவையில்லை என பயிற்சியாளர் விளக்கம்
அகமதாபாத்: இந்திய டி20 உலகக் கோப்பை அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா, தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் ரன் எடுக்கத் தவறிய போதிலும், அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவு அளிக்கும் என்று பேட்டிங் பயிற்சியாளர் சிதன்சு கோடக் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தெளிவான மனநிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அதிரடியாக ஆடுவதால் ஆபத்தும் அதிகமாக தான் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த உலகக் கோப்பையில் அபிஷேக், தான் ஆடிய இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் கணக்கைத் தொடங்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர் ஷாட்லி வான் ஷால்க்விக் வீசிய பந்தில் டீப் கவர் பகுதியில் கேட்ச் ஆனார். பாகிஸ்தானுக்கு எதிராக சல்மான் அலி ஆகா வீசிய பந்தில் மிட்-ஆன் பகுதியில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

நமீபியா ஆட்டத்திற்கு முன்னர் கடுமையான வயிற்றுத் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், 25 வயதான அபிஷேக் அப்போட்டியில் பங்கேற்கவில்லை. நெதர்லாந்து போட்டிக்கு முன்னதாக, அவரது ஃபார்ம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கோடக் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய கோடக், "நாங்கள் நிச்சயம் திட்டமிடுவோம், ஆனால் அபிஷேக் உடல்நிலை சரியில்லாமல் நமீபியாவுக்கு எதிராக விளையாடவில்லை. கடந்த ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்தார். சில விஷயங்களை நாம் தேவையில்லாமல் அதிகமாக ஆய்வு செய்கிறோம். சமயங்களில் எதிரணியை விட நாமே அதிக யூகம் செய்யத் தொடங்கிவிடுகிறோம்," என்றார்.
"அவருக்குத் தனது திட்டங்கள் குறித்து தெளிவாக உள்ளார். அவர் விரும்பியபடி அதை அவர் பின்பற்றுகிறார். எதிரணியினர், அவர்களின் பந்துவீச்சு, பலம் இவை அனைத்தையும் நாங்கள் விவாதிப்பது அபிஷேக்குக்கு மட்டுமல்ல, அனைத்து வீரர்களுக்கும் பொதுவானதே," என்று கூறினார்.
"அபிஷேக் உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு முன்னர் பல போட்டிகளில் ரன்கள் குவித்துள்ளார். டி20 வடிவத்தில் சில சமயங்களில் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுப்பதும் முக்கியம். அவர் ரன்கள் எடுக்கவில்லை என்று அர்த்தமல்ல. டி20 வடிவம் மிகவும் ஆபத்தானது. இதில் யாராவது ஆட்டமிழப்பார்கள். நாம் அதிகமாக அழுத்தம் கொடுத்தால், வீரர்கள் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார், தெளிவான திட்டங்களும் மனநிலையும் கொண்டவர். அதுவே எங்களுக்கு முக்கியம்,"
"ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவது முக்கியம். ஆனால், ஒரு வீரரின் சில தோல்விகள் காரணமாக இந்த அணுகுமுறை மாறாது. மாறாக, சூழ்நிலை மற்றும் களத்தின் நிலைகளைப் பொறுத்து திட்டங்கள் மாறும். உதாரணத்திற்கு, மும்பை ஆட்டத்தில் சூர்யா குறிப்பிட்ட நேரம் களத்தில் நிலைத்து நின்றார். அவர் சுமார் 30,35 பந்துகளுக்கு, ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் ஆடினார். அது சூழ்நிலைக்கு ஏற்ற விளையாட்டு," என்று கோடாக் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications